V3  விமர்சனம் : V3  படம் விந்தியா பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை இறுதியில் விவாத மேடையாகும் கருத்து | ரேட்டிங்: 3/5

0
440

V3  விமர்சனம் : V3  படம் விந்தியா பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை இறுதியில் விவாத மேடையாகும் கருத்து | ரேட்டிங்: 3/5

டீம் A வென்ச்சர்ஸ் தயாரித்து V3  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அமுதவாணன்.
இதில் வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன், விசாரணை கதை ஆசிரியர் சந்திர குமார், பொன்முடி, ஜெய் குமார், ஷீபா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – ஆலன் செபாஸ்டியன், ஓளிப்பதிவு – சிவா பிரபு, எடிட்டர் – நாகூரன், ஒலி வடிவமைப்பு – உதய குமார், கலரிஸ்ட் – ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா,காஸ்ட்டியூம் – தமிழ்ச் செல்வன், ஒப்பனை – ஹேமா – மீரா, தயாரிப்பு மேலாளர் – சந்தோஷ் குமார் | முத்துராமன், நிர்வாக தயாரிப்பாளர் – புகழேந்தி, பிஆர்ஓ – சதீஷ்குமார், சிவா – டீம் ஏய்ம்.

பேப்பர் ஏஜெண்ட்டாக இருக்கும் வேலாயுதத்திற்கு (ஆடுகளம் நரேன்) பாசமான இரண்டு மகள்கள் (பாவனா) விந்தியா மற்றும் (எஸ்தர் அனில); விஜி. அவர்களை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகள் விந்தியாவை அரசு வேலை தேர்வு எழுத வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.தேர்வு முடிந்து கோயமுத்தூர் ரெயில் நிலையத்தில் வந்திறங்கும் விந்தியா தன் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வரும்போது பாலத்தின் கீழ் பழுதாகி நின்று விடுகிறது. அங்கே ஐந்து பேர் மது போதையில் இருக்க, வண்டியை சரி செய்வதாக அதில் ஒருவன் கூறுகிறான். பழுதை சரி செய்யும் நேரத்தில், சீக்கிரம் வந்து விடுவதாக தன் தந்தைக்கும், தங்கைக்கும் செல்போனில் தகவல் தெரிவிக்கிறாள் விந்தியா. அதன் பின் விந்தியா வீட்டிற்கு வராததால் வேலாயுதம் மகளை தேடி அவள் சொன்ன இடத்திற்கு வருகிறார். ஆனால் வெறும் வண்டியைத் தவிர மகளை காணாததால் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். போலீஸ் வலை வீசி தேட எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்கின்றனர். அது விந்தியாதான் என்று வேலாயுதம் தெரிவிக்க, இந்த குற்றச் செயலை செய்த ஐந்து பேரை பிடிக்கும் போலீஸ் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யும் நேரத்தில் அவர்கள் தப்பிக்க நினைக்க ஐந்து பேரையும் என்கவுண்டர் செய்து விடுகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுத்த போலீசை மக்கள் கொண்டாடுகின்றனர். அதே சமயம் என்கவுண்டர் செய்த ஐந்து பேரின் உடல்களை கொடுக்குமாறும், அப்பாவிகள் என்று அவர்களது பெற்றோர் தகராறு செய்ய அங்கே நடக்கும் கைகலப்பில் பலர் காயமடைகின்றனர். இதனால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையில் (வரலட்சுமி சரத்குமார்) விசாரணை நடத்தப்படுகிறது.இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம், என்கவுண்டர் செய்யப்பட்ட ஐந்து குடும்பங்களின் பெற்றோர்கள், போலீஸ் உயர் அதிகாரி, இன்ஸ்பெக்டர் என்று தனித்தனியாக விசாரிக்கப்படுகின்றனர். இவர்களின் விசாரணையில் உண்மையில் நடந்த சம்பவம் என்ன? போலீஸ் என்கவுண்டர் எதனால் நடத்தப்பட்டது? உண்மையில் இறந்த வாலிபர்கள் குற்றவாளிகளா? எரித்து கொல்லப்பட்ட பெண் யார்? பாலியில் துன்பறுத்தலால் பாதிக்கப்பட்ட பாவனா எங்கே? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஐஏஎஸ் படித்து கலெக்டர் சிவகாமியாக வரலட்சுமி சரத்குமார் துணிச்சல்மிக்க முடிவுகளை எடுக்கும் தைரியமிக்க பெண்மணி. தன் வேலையில் நடந்த கசப்பான சம்பவத்தால் ஒதுங்கி இருக்கும் போது, மேலிடத்தில் வரும் அழுத்தம் காரணமாக இந்த குற்ற விசாரணையை நடத்த சம்மதிக்கிறார். அவரின் விசாரணை வளையம், கேட்கும் கேள்விகளால் திணறும் போலீஸ் அதிகாரி, பெற்றோர்களின் குமறல்களை பொறுமையாக கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் திறன் என்று தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அழுத்தமான முத்திரை பதித்து இறுதிக் காட்சியில் நீதியை நிலைநாட்டி தலை நிமிர வைத்து விடுகிறார்.

இரு மகள்களின் தந்தையாக ஆடுகளம் நரேன், யதார்த்தமான நடிப்பு. மகள்களைச் சுற்றியே அவரது உலகம் சுழல ஒரு சம்பவத்தால் தலைகீழாக மாற, மகளுக்காக அவர் எடுக்கும் தேடுதல் முயற்சி, பரிதவிக்கும் தவிப்பு, மகளுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து நொறுங்குவது, இறுதியில் ஊடகங்களை பார்த்து வெடிப்பது என்று அசத்தலான நடிப்பு கண் கலங்க வைத்து விடுகிறது.

பாலியல் துனுபுறுத்தலால் பாதிக்கப்படும் விந்தியாவாக வரும் பாவனா கயவர்களிடம் மாட்டிக் கொண்டு துன்புறுத்தப்படும் போதும், தப்பித்து ஒடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு மறைவாக இருக்கும் போது, இன்னோரு பெண் எரித்து சாம்பலாவதை பார்த்து அழுது புலம்பி காப்பாற்ற நினைத்து விரக்தியில் கதறும் போது மனதை நெருடச் செய்கிறார்.இறுதிக் காட்சியில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை விவரிக்கும் போது நடுக்கும் விரல்கள், கதறி பேசும் வசனங்கள், தன்னை கெடுத்தவர்களையும் அண்ணன் என்று கூறும் போது கண் கலங்க வைத்து விடுகிறார். இனி வாய்ப்புக்கள் அமைந்தால் சிறந்த நடிப்புத்திறன் கொண்ட பாத்திரங்களில் நிச்சயமாக ஜொலிப்பார்.

எஸ்தர் அனில், விசாரணை கதை ஆசிரியர் சந்திர குமார், பொன்முடி, ஜெய் குமார், ஷீபா ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இசை – ஆலன் செபாஸ்டியன், ஓளிப்பதிவு – சிவா பிரபு ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்தின் விவரிப்புகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

எடிட்டர் – நாகூரன் எதையும் விட்டுவிடாமல் படத்தை சிறப்பாக படத்தொகுப்பு செய்துள்ளார்.

விந்தியா விக்டீம் வெர்டிக்ட் என்பதே V3 படத் தலைப்பின் சுருக்கம்.இந்தியாவில் பல பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமல் நடந்து  கொண்டு தான் இருந்தது. ஆனால்;  உலகத்தையே பதற வைத்த 2012ல் நிர்பயாவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை தான் பல போராட்டங்களுக்கு வழி வகுத்தது. அதன் பின் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்த, பேசும் பொருளாக மட்டுமே இருந்த வந்து அதற்கான தீர்வை இது வரை யாரும் தெளிவாக கொடுக்கவில்லை, தண்டனையும் கடுமையாக இல்லை.நாளுக்கு நாள் இத்தகைய வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அரசியல் அதிகாரம், போலீஸ் துஷ்பிரயோகத்தால் ஐந்து அப்பாவி இளைஞர்களை போலி என்கவுண்டர், அதனை தீவரமாக விசாரித்து தகுந்த தீhப்;பு சொல்லும் கதைக்களத்தில், பாலியல் தொழிலை அங்கீகரித்தல் போன்ற கோரிக்கையுடன் முடித்திருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் காரணத்தை உண்மையாக அறிந்து அதற்கான தீர்வை உடனடியாக கொடுத்து குழந்தைகளையும், அப்பாவி பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் டீம் A வென்ச்சர்ஸ் தயாரித்திருக்கும் V3  படம் விந்தியா பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை இறுதியில் விவாத மேடையாகும் கருத்து.