மாமல்லபுரத்தில் கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு தொடக்கம்

0
154

மாமல்லபுரத்தில் கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு தொடக்கம்

கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில்  தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி இதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், தோல்வி பகுப்பாய்வு சங்கம் ஆகியவை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம், அழிவற்ற சோதனைக்கான இந்திய சங்கத்தின் கல்பாக்கம் கிளை, இந்திய உலோகங்கள் கழகத்தின் கல்பாக்கம் கிளை, இந்தியக் கட்டமைப்பு ஒருமைப்பாட்டு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஐகான்ஸ் 2023-க்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய  டாக்டர் கலைச்செல்வி, புவி வெப்பமயமாதலால் மின் நிலையங்கள், பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகள், இந்தியாவின் பாரம்பரிய கட்டமைப்புகள் ஆகியவற்றின் சீரழிவு குறித்து எடுத்துரைத்தார். கரியமில வாயு உறிஞ்சப்படுவதால் ஏற்படும் கட்டமைப்பு சீரழிவைத் தடுக்க ஒரு புதிய முறையை உருவாக்க அவர் வலியுறுத்தினார். இளம் ஆராய்ச்சியாளர்கள் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தலைமையுரையாற்றிய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.வெங்கட்ராமன், கட்டமைப்பு சுகாதாரக் கண்காணிப்பை மனித மைய நரம்பு மண்டலத்தின் உடற்கூறியலுடன் தொடர்புபடுத்தி பேசினார். பொறியியல் கூறுகளின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டு மதிப்பீட்டிற்கான இந்தியத் தரநிலைகள் மற்றும் குறியீடுகள் உருவாக்கப்படுவதையும் அவர் வலியுறுத்தினார்.

மாநாட்டுத் தலைவரான சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்தியாவில் கட்டமைப்பு ஒருமைப்பாடு சோதனையின் சுருக்கமான வரலாற்றையும், கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் சோதனையின் உச்சக்கட்டத்தையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். பல்வேறு கட்டமைப்பு பயன்பாடுகளுக்கான உள்நாட்டுக் குறியீடுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம், எதிர்காலத்தில் எலும்பு முறிவு குறித்த சர்வதேச மாநாட்டை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

இந்திய அணுமின் கழகத்தின் எல்.டபிள்யூ.ஆர் பொறியியல் செயல் இயக்குநர் திரு என்.ராம மோகன், வடிவமைப்பு, உற்பத்தி, கட்டுமானம் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகள் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வடிவங்களில் கட்டமைப்பு ஒருமைப்பாட்டு மதிப்பீட்டின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த இலக்குகளை அடைவதற்கான உகந்த வழிகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஒத்துழைக்க அனைத்துப் பங்குதாரர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர்  கூறினார்.

இந்திய அணுமின் கழகத்தின் தர உத்தரவாதப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திரு தாமஸ் மேத்யூ, தர உத்தரவாதம், கட்டமைப்பு ஒருமைப்பாடு மதிப்பீடு ஆகியவற்றுக்கு இடையிலான உள்ளார்ந்த தொடர்புகள் குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார். வடிவமைப்பு மற்றும் கட்டுமான செயல்முறையில் கட்டமைப்பு ஒருமைப்பாடு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தை அவர் எடுத்துரைத்தார். கட்டுமானத் தொழில்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டில் இதேபோன்று கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே.ரவி-சந்தர், ஐகான்ஸ் 2023-இன்  முதலாவது  பேரமைப்பு உரையை நிகழ்த்தினார். எலாஸ்டோமர்களில் சேதத்தை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் பல்வேறு கோட்பாடுகளை அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார். புதிய வகையான சோதனைகள் மூலம் எலாஸ்டோமெரிக் பொருட்களில் சேதத்தின் தொடக்கம் மற்றும் பரவல் குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளை முன்வைத்த அவர்,   அவற்றை மற்ற வகை பொருட்களில் ஏற்படும் சேதத்துடன் தொடர்புபடுத்தினார்.

ஐகான்ஸ் 2023-ல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயந்திரப் பொறியாளர்கள், பொருள் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிற்சாலை மேலாளர்கள், முறைசார்ந்த பணியாளர்கள் உள்பட சுமார் 250 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, ரசாயனம் மற்றும் எண்ணெய் தொழில்களில் கட்டமைப்புகள், செயல்பாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை மதிப்பிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் அண்மைக்கால வளர்ச்சி மற்றும் எதிர்கால திசைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாடு விவாதத்தை நடத்தும்.

நாளை நிறைவடையும் இந்த மாநாட்டில்  இத்துறையின் முன்னணி வல்லுநர்களின் சுமார் 35 விரிவுரைகள் இடம்பெறும்; சுமார் 200 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.