பயிற்சியின் போது பயங்கர விபத்து.. துபாயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்துக்குள்ளானது!
விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்த நடிகர் அஜித்குமார், இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும், டப்பிங் பணிகளையும் சமீபத்தில் முடித்தார். குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் பொங்கல் தினத்திலிருந்து விலகி தள்ளிச்சென்றுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவரான அஜித், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிலும் கவனம் செலுத்தி வருவதை தொடர்ந்து செய்துவருகிறார்.
அந்தவகையில் இரண்டு படங்களின் வேலையையும் முடித்துவைத்த அஜித்குமார், நீண்ட இடைவெளிக்கு பிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச்சென்றார்.
PORSCHE 992 GT 3 பிரிவிலான கார் பந்தயமானது துபாயில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நடிகர் அஜித்தின் அணியும் பங்கேற்க உள்ளது. இதில் அஜித்தும் நீண்ட இடைவெளிக்குபிறகு ஓட்டுநராக அறிமுகமாக உள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் 5 ரேஸ் போட்டிகளில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் துபாயில் கார் பந்தயத்திற்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட அஜித் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அஜித் சென்ற கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அருகிலிருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதுகிறது. சிறிதுநேரத்தில் காரிலிருந்து அஜித்குமார் வெளியில் வந்த நிலையில், அவருக்கு பெரிய காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் காரின் முன்பகுதி மோதிய வேகத்தில் நொறுங்கியது.