516 சுய உதவிக் குழுக்கள் : 6135 மகளிருக்கு ரூ.30.20 கோடி வங்கிக் கடன் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (30.09.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும் நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் மேம்பாட்டுத நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியதின் காரணமாக அனைத்து மாவட்டங்களுக்கும் “மகளிர் திட்டம்” என்ற பெயரில் படிப்படியாக விரிவுபடுத்தியதுடன் இத்திட்டம் பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி மற்றும் முதன்மை திட்டமாகவும் விளங்குகிறது.
சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கத் தேவையான வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, முறையான பயிற்சி மற்றும் கூட்டமைப்புகள் மூலம் வங்கிகளுடன் நிதி இணைப்பு ஏற்படுத்தி வருமானம் ஈட்டும் தொழில்களில் ஈடுபட்டு சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழு ஏற்படுத்தவும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்த முதல் ஐந்து அறிவிப்புகளில் ஒன்றான மகளிருக்கு இலவச பேருந்து பயண அறிவிப்பில் துவங்கி, மகளிரின் பொருளாதார சுமையை குறைப்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த கடன் தொகைகளை தள்ளுபடி செய்து அறிவித்தது வரை எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மகளிர் முன்னேற்றத்தில் இவ்வரசு என்றும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை மகளிர் சமூகம் பெருமையாக கருதுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஊரகம் மற்றும் நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2006-2007ஆம் ஆண்டு மணிமேகலை விருதுகளை அறிவித்தார்.
கடந்த 2006-07ஆம் ஆண்டு முதல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த மணிமேகலை விருதுகள் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வழங்கப்படவில்லை.
2021-22 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மணிமேகலை விருது மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2021-22 ம் ஆண்டில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புரப் பகுதி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு 29.12.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டன.
இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளுக்கான மணிமேகலை விருதுகளையும், ஊரகப் பகுதியில் செயல்படும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், 10 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய், 10 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், மற்றும் 2 வட்டார அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதமும், நகர்ப்புரங்களில் செயல்படும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், 6 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய், இரண்டு நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ஐந்து இலட்சம் வீதமும் விருதுத் தொகைகளையும் வழங்கினார்.
வங்கிக் கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் நுகர்வு மற்றும் வாழ்வாதார செயல்பாடுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியாவிலேயே, முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கான கடன் இலக்கு நிர்ணயிக்கும் முறை 2007-08ஆம் ஆண்டு வங்கியாளர் கூட்டத்தில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-2024ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074.76 கோடி என ரூ.91,772.05 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் என 15,54,718 சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள 2,02,11,334 மகளிர் பயன் பெறும் வகையில் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,135 மகளிருக்கு 30.20 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தொகையை சீராக திரும்ப செலுத்தி வருவதால், சுய உதவிக் குழுக்களின் வாராக்கடன் அளவு, வங்கிகளின் பிற கடன் திட்டங்களை காட்டிலும் குறைந்த அளவில் உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதை துரிதப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கடந்த 25.10.2021 அன்று நடத்தப்பட்ட மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் வங்கியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிக வங்கிக் கடன்களை வழங்க வங்கியாளர்களை ஊக்குவிப்பதோடு வங்கிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளுக்கான வங்கியாளர் விருதுகள் 2008-09 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று நடைபெறும் விழாவில் 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை வங்கி, தனியார் துறை வங்கி, கிராம வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 வங்கிகளுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழும், சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கி கிளைகளில் சிறப்பாக செயல்படும் 4 வங்கிக் கிளைகளுக்கான விருது, சான்றிதழ் மற்றும் விருது தொகையும், சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கிகள் அல்லாத இதர வங்கி கிளைகளுக்கான பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படும் 3 வங்கிக் கிளைகளுக்கான விருது, சான்றிதழ் மற்றும் விருது தொகை போன்றவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.