ஸ்டாலின் இன்று நினைப்பதை இந்தியா நாளை செய்யும்” -ஆற்றல் படைத்த முதல்வர் பற்றி பிரபு சாவ்லா கூறுவது என்ன?

0
126

ஸ்டாலின் இன்று நினைப்பதை இந்தியா நாளை செய்யும்” -ஆற்றல் படைத்த முதல்வர் பற்றி பிரபு சாவ்லா கூறுவது என்ன?

திராவிட சிந்தனைகளை தேசிய அளவில் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த முதல்வர் ஸ்டாலின் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் Stalin’s politics fuels new national federalism என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லா சிறப்புக் கட்டுரையை கடந்த பிப்ரவரி 13ம் தேதி வெளியான தி சண்டே இந்தியன் எக்ஸ்பிரஸில் இயற்றியிருந்தார்.

அதனை முரசொலி நாளேடு தமிழில் மொழிப்பெயர்த்து பிரசுரித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கலாச்சார அடையாளங்கள் மரபின் வழி வருகின்றன. மே 7, 2021 அன்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அடுத்த சில நிமிடங்களில் தனது டிவிட்டர் பக்கத்தின் அடையாள வாக்கியமாக “நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்” என்று பொறித்து வைத்தார். கூடவே, “எப்போதும் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக முன் பந்தியில் நிற்பேன்” என்கிற முத்திரை வாக்கியத்தையும் அதில் சேர்த்துக் கொண்டார்.

கலைஞர் திராவிடத் திருவுருவாகக் கொண்டாடப்பட்டவர்!

திராவிட நாகரீகத்தின் வழித்தோன்றலான இந்தத் தலைவர், இன்று தேசிய நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கிறார். இவரது புகழ்பெற்ற தந்தையார் மு.கருணாநிதி, திராவிடத் திருவுருவாகக் கொண்டாடப்பட்டவர், பல பிரதமர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், அதன் பின்னணியில் செயல்பட்ட கிங் மேக்கர். அவர் தமிழகத்தை ஆண்டபோது, ஒரு தசாப்த காலம் தேசிய அரசியலின் போக்கையும் நிர்ணயிப்பவராக இருந்தார். கலைஞர் அடிக்கடி டில்லிக்குப் போனவர் அல்ல; ஆனால், எல்லாப் பிரதமர்களும் அவர் தங்கள் பக்கம் இருக்கவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்கள். ஸ்டாலின் அந்த உயரத்தை இன்னும் எட்டவில்லை. ஆனால் அந்த இடத்தை நோக்கி கலைஞர் வழியில் வெகு வேகமாக முன்னேறுகிறார். கலைஞர் தனது எழுத்தாற்றலாலும் பேச்சாற்றலாலும் மக்கள் திரளை வசியம் செய்து வைத்திருந்தார். ஆனால் தென்னக அரசியலில் ஸ்டாலினின் பாதையும் அதன் இலக்கணமும் வித்யாசமானவை. அவர் ஒன்றிய அரசோடு தனியாகப் போராடுவதில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒரு அரசியல் மாற்றை உருவாக்குகிறார். அவருக்கு மக்களின் நாடித்துடிப்பு தெரிந்திருக்கிறது. அவர் மாநிலப் பிரச்சினைகளை முழு வீச்சில் கையாள்கிறார். அதே வேகத்தில் அவர் தேசியப் பிரச்சினைகளையும் கையாள்கிறார்.

அவரது தந்தையாரின் நிழலில் பணியாற்றிய போது இந்த அரசியல் திறனை அவர் கற்றிருக்க வேண்டும். கடந்த வாரம், பிரதமர் மோடி தமிழ்நாட்டைக் குறித்து நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டபோது, ஸ்டாலின் கையுறை தரித்துக் களத்தில் இறங்கினார். உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் மோடிக்குப் பதிலடி கொடுத்தார். “தமிழர்களின் நாட்டுப்பற்றுக் குறித்து எங்களுக்குப் பிரதமரின் சான்றிதழ் எதுவும் தேவையில்லை. வரலாறு நெடுகிலும் அதற்குச் சான்றுகள் உள்ளன” என்றார். மேலும், தமிழகம் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாகத்தான் பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சோழப் பேரரசு ஆசியாவின் பல பகுதிகளில் அரசோச்சிய வரலாற்றையும் அவர் நினைவூட்டினார். முதல்வரின் பேச்சு நெடிய தமிழ்ப் பராம்பரியத்தின் எதிரொலியாகவே இருந்தது. குடியரசு நாள் அணிவகுப்பிற்காக தமிழகம் அனுப்பிய அலங்கார ஊர்தியில் விடுதலைக்காகப் போராடிய தமிழ் வீரர்களையும் மகாகவி பாரதியாரையும் காட்சிப்படுத்தி இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு இந்த ஊர்திக்குப் பிடிவாதமாக அனுமதி மறுத்தது. இதற்கான கண்டனமாகவும் முதல்வரின் உரை அமைந்தது. இந்திய அரசியல் களத்தில் தி.மு.கவின் அடையாளத்தை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று தமிழக முதல்வர் உரக்க அறிவித்ததாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு மாநிலச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது!

ஸ்டாலினை ஒரு மாநிலச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது. கடந்த கோடையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது அவர் தனது தேசியப் பார்வையை வெளிப்படுத்தினார். ‘நமது அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டைத் தி.மு.க ஒரு போதும் நீர்த்துப் போக அனுமதிக்காது’ என்று தெளிவுபடுத்தினார். முதல்வர் மென்மையாகப் பேசக்கூடியவர் தான். எளிய வெள்ளைச் சட்டையும் வேட்டியும் தான் அவரது உடை. ஆனால் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் சித்தாந்தத் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் அவரது ஆட்சியின் திசைவழியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன. கடந்த 55 ஆண்டுகளாக தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன. ஆகவே ஸ்டாலின் தமிழகத்தில் தனது ஆதரவுத் தளத்தில் காலூன்றி நிற்கிறார். அதே வேளையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற மாநிலங்களோடு சேர்ந்து கொள்கிறார். மாநில உரிமைகளை அவர் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதே இல்லை.

‘நீட்’ பிரச்சினையில் டில்லியோடு மோத தயங்காதவர்!

‘நீட்’ தேர்வுப் பிரச்சினையில் அவர் டில்லியோடு மோதத் தயங்கவில்லை. அதை அவர் மாநிலங்களின் உரிமைப் பிரச்சினையாகப் பார்க்கிறார். நமது அரசியலமைப்பின்படி கல்வி என்பது ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் வரவேண்டியது, அதில் மாநிலங்களின் சம்மதமின்றி ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதை அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் மருத்துவராவதற்கு `நீட்’ ஒரு தடைக்கல்லாக இருக்கிறது என்பது தி.மு.கவின் கருத்து. `நீட்’ தேர்வுகள் வருவதற்கு முன்பு, அவர்களுக்கு அனுமதி கிடைத்தது, நுழைவுத் தேர்வுகள் மாநில அளவில் நடந்தன. உச்ச நீதிமன்றம் நீட்டிற்குச் சாதகமாக இருப்பதான கருத்து நிலவுகிறது. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நீட்டிற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. பனிரெண்டு மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் நீட் வாயிலாக ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மீறுகிறது என்றும், ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் சமன்பாட்டைக் குலைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். உயர் கல்விக்கூடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வழிமுறையை மாநில அரசுகள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அது மாநிலங்களுக்கு அரசமைப்பு வழங்கிய உரிமையாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின். ஒன்றிய அரசோடு ஸ்டாலின் தொடுத்திருக்கும் பல போர்களில் ஒன்றுதான் நீட். அவர் பதவியேற்றவுடன் அதிகாரிகளுக்கு இட்ட முதல் கட்டளை, ‘மத்திய’அரசு என்பதை மாற்றி ‘ஒன்றிய’ அரசு என்றழைக்க வேண்டும் என்பதாகும்.

தி.மு.க. அரசு பா.ஜ.க.வுக்கு ஒரு காலத்திலும் பக்க வாத்தியம் இசைக்காது!

“இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறே, ‘இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்க வேண்டும்’ என்கிறது. நாங்கள் அதைத்தான் பயன்படுத்துகிறோம். சட்டத்துக்குப் புறம்பாக நாங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது பிழையான சொல்லாடல் இல்லை, அது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைக் குறிக்கிறது”. இப்படிச் சொன்னதன் மூலம் அவர் மோடிக்கு அனுப்பிய சமிக்ஞை தெளிவானது. பல பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் செய்தது போல, தி.மு.க. அரசு பா.ஜ.கா.வுக்கு ஒரு காலத்திலும் பக்கவாத்தியம் இசைக்காது என்பதுதான் அது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்யும் சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு முன்மொழிய இருப்பதாக அறிந்தவுடன் ஸ்டாலின் மீண்டும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். அது கூட்டாட்சித் தத்துவத்தின் மனசாட்சியாக எதிரொலித்தது. இந்தப் புதியச் சட்டம் அமலுக்கு வந்தால், மாநில அரசுகளின் ஒப்புதலின்றி அலுவலர்களை ஒன்றிய அரசுப்பணிக்கு எடுத்துக் கொள்ள முடியும். ஸ்டாலின் மோடிக்கு இப்படி எழுதினார்: “இந்தச் சட்டத் திருத்தம் ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டாட்சிச் சித்தாந்திற்குப் பெரும்கேடு விளைவிக்கும். ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கைவிடுமாறு கோருகிறேன். மாநிலங்களுடன் ஒத்திசைவோடு உறவாடி, நமது மூதாதையர்களின் உயரிய நோக்கங்களை நிறைவேற்றுங்கள். அதுவே கூட்டாட்சியை வலுப்படுத்தும்.”

திராவிடப் பால்வெளியில் புதிய சூரியனின் உதயம்!

திராவிடப் பால்வெளியில் ஒரு புதிய சூரியன் மேலெழும்பி வருகிறது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. ஸ்டாலினின் சமூக நீதி மந்திரம் ஆலயங்களுக்குள்ளும் நீண்டிருக்கிறது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40000 சிறிய மற்றும் பெரிய ஆலயங்களில் பிராமண சமூகத்தினரே அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். சாதி ரீதியாக அர்ச்சகர்களை நியமிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்திருந்தபோதும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை. இந்த வழக்கத்தை மாற்றினார் ஸ்டாலின். கடந்த ஆண்டு பிராமணரல்லாத 25 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கினார். இதில் ஐந்து பேர் தலித், ஒருவர் பெண். ஸ்டாலின் நாத்திகராக இருந்த போதும், தனது கட்சியினர் கோயில்களுக்குப் போவதற்கோ மதச்சடங்குகளை அனுசரிப்பதற்கோ தடை சொல்வதில்லை. ஸ்டாலின் தனது இயக்கத்தின் முன்னோடிகளிடமிருந்து அறிவின் மேன்மையை அறிந்தவர். அதிலிருந்து பெற்ற ஊக்கத்தால் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு தனது இயக்கத்தினரைக் கேட்டுக் கொண்டார். மாறாக தமிழ்க் கலாச்சாரத்தையும் தமிழின் இலக்கியச் செழுமையையும் வெளிப்படுத்தும் நூல்களைப் பரிசாகக் கொடுக்கலாம் என்றார். இதற்கு அவரே முன்மாதிரியாகவும் நடந்து கொண்டார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது ‘Sculptors of Classical Tamil’ என்கிற நூலை வழங்கினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தபோது ‘Multiple Facets of MyMadurai’ என்கிற நூலைப் பரிசளித்தார். சோனியா காந்திக்கு அவர் வழங்கிய நூல் ‘Journey of a Civilisation:Indus to Vagai’. அவரது பன்முக நடவடிக்கைகளால் தமிழ் சமூகம் புதிய வெளிச்சத்தில் பார்க்கப்படுகிறது.

தேர்ந்த ராஜதந்திரிக்கான அவசியமான பண்பு நலன்கள்!

பொருளாதார முன்னெடுப்புகளும் அரசியல் நெகிழ்வுத்தன்மையும் ஒரு தேர்ந்த ராஜ தந்தரிக்கு அவசியமான பண்பு நலன்கள். ஸ்டாலினின் தலைமையில் தமிழகம் டிரில்லியன் – டாலர் பொருளாதாரத்தை இலக்காக வைத்து முன்னேறுகிறது. இப்போது தமிழகம் இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 300 பில்லியன் டாலராக இருக்கிறது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் (1000 பில்லியன் டாலர்) பொருளாதாரமாக மாற்றுவதுதான் தனது இலக்கு என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். “தமிழகத்தைத் தெற்கு ஆசியாவின் சிறந்த மாநிலங்களுள் ஒன்றாக மாற்றுவோம்” என்கிறார் அவர். முதலீடுகளை வரவேற்கும் சூழலை மாநிலத்தில் உருவாக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுரைத்தியிருக்கிறார். அவர் மூத்த அதிகாரிகளோடு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் போலப் பேசுகிறார். “நமது சிந்தனைகள் அறிவுப்புகளாக வேண்டும். நமது அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நமது அரசு மக்களுக்கு உழைக்கும் இயந்திரமாக விளங்க வேண்டும்.” என்று அதிகாரிகளோடு விவாதிக்கும் போது குறிப்பிடுகிறார். ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். தமிழகத்தின் வளர்ச்சியை தேசிய அளவில் வளர்த்தெடுக்க அவர் விரும்புகிறார். தமிழகத்தில் வேலையின்மை குறைவாக இருக்கிறது. ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். தமிழகத்தின் வருவாயில் பாதி சேவைத் துறையிலிருந்து வருகிறது.

ஸ்டாலின் இன்று நினைப்பதை இந்தியா நாளை செய்யும்!

ஆகவே வெளிநாட்டினர் விரும்பி முதலீடு செய்யும் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. தமிழக மக்கள் தேசியக் கட்சிகளைப் புறக்கணிக்கிறார்கள், மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்கிறார்கள். ஸ்டாலின் தி.மு.கவின் ஆதாரக் கொள்கைகளிலிருந்து இம்மியும் பிசகுவதில்லை. அதே வேளையில் திராவிட சித்தாந்தங்களை தேசிய அளவிலும் எடுத்துச் செல்கிறார். அவரிடம் அதற்கான ஆற்றலும் ஊக்கமும், நெகிழ்வும் உள்ளன. அவரது ஆதரவாளர்களுக்கு அவரது மிக உயரிய இலக்கு என்ன என்பது நன்றாகத் தெரியும். இன்று ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்பதை, நாளை இந்தியா செய்யும்.

இவ்வாறு பிரபு சாவ்லா தனது சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.