தமிழகத்தில் தயாரான 600 கிலோ வெண்கல மணி: அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறது

0
543

தமிழகத்தில் தயாரான 600 கிலோ வெண்கல மணி: அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறது

காஞ்சீபுரம், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு தமிழகத்திலிருந்து 600 கிலோ எடையிலான வெண்கல மணி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படு கிறது. 21ம் தேதி காஞ்சீபு ரத்துக்கு மணியை எடுத்து வரும் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக காஞ்சீபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவர் பி.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நித்ய பூஜைக்காக 613 கிலோ எடையில் வெண்கல மணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகா மணியை ஒரு மினி லாரியில் வைத்து யாத்திரையாக ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி 4552 கி.மீ அதாவது 10 மாநிலங்கள் வழியாக கொண்டு சென்று, அயோத்தியில் சேர்க்கப்பட உள்ளது.

இந்த யாத்திரை 17-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி, அக்டோபர் 7ம் தேதி அயோத்தியில் நிறைவு பெறுகிறது. வழியில் 21ம் தேதி காலையில் சென்னைக்கும், மதியம் காஞ்சீபுரத்துக்கும் மணி வருகிறது. மணியை எடுத்து வரும் குழுவினருக்கு காஞ்சீபுரத்தில் பொன்னேரிக்கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து ராமநாத சுவாமி கோயில், ஏகாம்பரநாதர் கோயில், சங்கர மடம், காமாட்சி அம்மன் கோயில், காந்தி சாலை, வரதராஜப்பெருமாள் கோயில் வழியாக ஊர்வலமாக மணி கொண்டு வரப்படும். பிறகு தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காஞ்சீ சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் யாத்திரை வேலூருக்கு செல்லும்.

இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளரான ராஜலட்சுமி மந்தாவின் செலவில் இந்த மணி உருவாக்கப்பட்டுள்ளது. மணி யாத்திரை வரும்போது பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வழிபாடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.