தமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

0
392

தமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை, அக்.2-–

தமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. தீர்வை முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–

22.-9.-2020 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு 2017-–2018–-ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு ரூ.4,321 கோடி என ஒப்புக்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் குழு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு பரிந்துரைகள் செய்வதற்கு முன்னர், மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையினை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

1-–ந் தேதி அன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில், தற்போது நிலுவையிலுள்ள தொகை குறித்த கணக்கீடுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் குழு மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இறுதி தொகையினை ஆராய்ந்து, 5-–ந் தேதி அன்று நடைபெற உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் பரிசீலனை செய்திட பரிந்துரை செய்துள்ளது. நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் துணை முதல்-மந்திரி தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் வணிகவரி முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் எம்.ஏ.சித்திக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.