சென்னை – வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில், கோவிஷீல்ட் தடுப்பூசி முகாமை தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

0
200

சென்னை – வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில், கோவிஷீல்ட் தடுப்பூசி முகாமை தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

  • கோவிட் 19க்கு எதிரான தடுப்பூசி முகாமின் முதல்கட்ட நிகழ்வாக 1500 முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடும் பணித் தொடக்கம்! 

சென்னை, ஜனவரி 19, 2021 

இந்தியா முழுவதும் தொடங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமான – கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி போடும் பணியில் சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை (SIMS Hospital) இன்று பங்கேற்றது. நாட்டின் மிகப் பெரிய சுகாதார தற்காப்பு நடவடிக்கையான இதை மருத்துவரும், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருமான மருத்துவர் ஜெ ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தொடங்கி வைத்தார்.

இந்திய அரசின் இந்த முதல்கட்ட தடுப்பூசி முயற்சியில் சுமார் 1500 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நமது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் முன்களப் பணியாளர்கள் பயன்பெறுவர். இந்த இலவச தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள ஆர்வமுள்ள இத்தரப்பினர் அனைவரும், அரசு தரப்பில் வழங்கப்பட்ட எதேனும் ஒரு அடையாள அட்டையைக் காட்டி இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தத் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்து பேசிய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ ராதாகிருஷ்ணன், “கோவிட் 19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அனைவரையும் ஊக்குவிப்பதுடன், அதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களிடையே இதற்கான ஆர்வத்தை அதிகரிப்பது மிக முக்கியம். இந்த தடுப்பூசி நம்பகமானது… பாதுகாப்பானது என்பதை வலியுறுத்தும் வகையில், நானே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். ஏற்கனவே கோவிட் 19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பல சுகாதாரப் பணியாளர்கள், இந்த முகாமிலும் ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளனர் என அறியும்போது மகிழ்ச்சியடைகிறேன். இந்த முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், ஏற்கனவே கோவிட் 19க்கு எதிராக மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிவது, கைகளில் கிருமி நீக்கம் செய்வது, உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதோடு, தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசியை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து பேசுகையில், “கோவிட் 19 பெருந்தொற்றுக்கு எதிரான நமது போரின் ஒருபகுதியாக, தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப் பெரிய தடுப்பூசி முகாமான கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் பணியில் சிம்ஸ் மருத்துவமனையும் பங்கேற்கிறது என்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். கடந்த 10 மாதங்களில் சுமார் 3500 கோவிட் நோயாளிகளுக்கு நம் சிம்ஸ் மருத்துவமனை மூலமாக சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளோம் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். அதோடு, தற்போது சிம்ஸ் மருத்துவமனையில் நடைபெறும் முகாமில், இந்த மருத்துவமனையின் பல்வேறு துறைத் தலைவர்கள், தலைசிறந்த மருத்துவர்கள் உள்பட நானும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானிய மக்கள் ஏராளமானவர் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், தங்களது வாழ்வாதாரப் பணிகளில் துணிச்சலாக ஈடுபடவும் நம்பிக்கையளிக்கும் விதமாக தமிழக மற்றும் மைய அரசு எடுத்து வரும் இந்த முக்கியப் பணியில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பளித்தற்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.