சூரரைப் போற்று சினிமா விமர்சனம்

0
820

சூரரைப் போற்று

சினிமா விமர்சனம்

மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். தந்தையின் அகிம்சை வழியை நம்பாமல் போராட்டமே தீர்வு என்று களம் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.
ஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார். லைசென்ஸ் சிக்கல், பெரும் பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார்.
இதிலிருந்து மீண்டு இறுதியில் மிக மிகக் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் அங்கு இருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்ணீரில் நனைய வைக்கிறார். சூர்யாவின் நடிப்பு கம்பீரம்.
நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தை உணர்ந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகன் மீதான பாசத்தை அப்படியே கடத்தியிருக்கும் பூ ராமும், தாயாக வரும் ஊர்வசி நடிப்பில் மிளிர்கிறார்கள். கருணாஸ், சூர்யாவின் நண்பனாக வரும் காளி வெங்கட், கதாபாத்திரத்தை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பின்னணி இசை கதையோடு ஒன்றிப்போவதற்கு உதவியிருக்கிறது.
டெல்லி, மதுரை, விமானங்களின் ஓட்டம் என்று சுற்றிச் சுழன்று விதவிதமான கோணங்களில் நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிளி ஃப்ளை” நூலை அடிப்படையாகக் கொண்டும் ‘சூரரைப் போற்று’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தில் சூர்யாவில் துவங்கி வில்லனாக வரும் பரேஷ் வரை நடிகர்கள் தேர்வும் கனகச்சிதம்.
மொத்தத்தில் ‘சூரரைப் போற்று” ஒரு நல்ல பொழுது போக்கு சினிமா மட்டுமல்ல, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அருமையான மேக்கிங்கும் வெற்றிகளிப்புடன் மக்கள் மனதில் ‘சூரரைப்போற்று”(ம்).
கலைப்பூங்கா ரேட்டிங் ‘சூரரைப் போற்று” படத்துக்கு 4 ஸ்டார்.