இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய டி.சி.ஜி.ஐ அனுமதி

0
268

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய டி.சி.ஜி.ஐ அனுமதி

புதுடெல்லி: உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளன. இதனை மனிதர்கள் மீது பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு “கோவிஷீல்டு”(COVISHIELD) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தில் 2, 3ஆம் கட்டமாகவும், பிரேசிலில் 3வது கட்டமாகவும், தென் ஆப்பிரிக்காவில் 1,2வது கட்டமாகவும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா(SII) என்ற நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

இதனை இங்கு மூன்று கட்டங்களாக பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் மனிதர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு முதல் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இதன் முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்த சூழலில் 2, 3வது கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அனுமதி கோரியது.

இதனை பரிசீலிக்க மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வுகள் நடத்தியதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்கள் மீது 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு கடந்த மாதம் 31ஆம் தேதி பரிந்துரை செய்தது.

இதனை ஏற்றுக் கொண்ட அமைப்பு, இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து மனிதர்களுக்கு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.