அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார்… விடுதலை போராட்ட பங்களிப்பை பெருமைப்படுத்திய தி.மு.க அரசு!

0
116

அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார்… விடுதலை போராட்ட பங்களிப்பை பெருமைப்படுத்திய தி.மு.க அரசு!

73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் சென்னையில் நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்டன.

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து, டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்துச் சென்றன. மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் உருவச் சிலை இடம்பெற்ற ஊர்தியும் அணிவகுப்பில் பங்கேற்றது.

தந்தை பெரியார் 1919-ஆம் ஆண்டு அன்று தேச விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அன்றைய காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கைகளான கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காக அரும்பாடுபட்டார் தந்தை பெரியார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகவே தாம் பதவி வகித்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பொது பதவிகளை தூக்கி எறிந்தார் தந்தை பெரியார். தாம் மட்டுமல்ல தமது குடும்பத்தினரையும் தேச விடுதலைப் போரில் பங்கேற்கச் செய்தார்.

1921-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றதால் பெரியார் சிறை சென்றார். அப்போது மனைவி நாகம்மையாரையும் சகோதரி பாலாம்பாள் அம்மையாரையும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். விடுதலைப் போரில் தமது குடும்பத்தையே களமிறக்கி முன்னோடித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தந்தை பெரியார்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் முன்னுதாரணமாக கள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட தமது தென்னந்தோப்பில் இருந்த 500 மரங்களை வெட்டிச் சாய்த்து விடுதலை வேட்கையை வெளிப்படுத்தினார் தந்தை பெரியார்.

ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றவர் தந்தை பெரியார். அடுத்ததாக தீண்டாமை எதிர்ப்பு போரில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று களமாடினார் தந்தை பெரியார். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் தலித்துகள் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை உடைக்க அங்கே போராட்டங்கள் நடந்தன. அப்போது தந்தை பெரியாரை போராட வருமாறு கேரளா தலைவர்கள் அழைத்தனர். இதனை ஏற்று வைக்கம் வீதிகளில் போராடி சிறை சென்றார். இதனால் வைக்கம் வீரர் என்கிற பட்டமும் பெரியார் வரலாற்றில் இணைந்தது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தேசியவாதிகள் தங்களது நெஞ்சங்களில் ஆதிக்க ஜாதி, அடக்குமுறை மனோபாவத்துடன் செயல்படுவதை பெரியார் விரும்பவில்லை. தந்தை பெரியார் இத்தகைய அடக்குமுறைகளில் இருந்து சமூக விடுதலையே பிரதானம் என்பதை நேசித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

நீதிக்கட்சியுடன் கரம் கோர்த்து பின்னர் நீதிக்கட்சியின் தலைவரானார். நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கினார். அந்த திராவிடர் கழகத்தின் நீட்சிதாக இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு. தந்தை பெரியாரின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பை குடியரசு தின ஊர்வலத்தில் காட்சிப்படுத்தி பெருமை சேர்த்திருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு.