வாஷிங்டனில் கோலாகல விழா: அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார்
வாஷிங்டன், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (வயது 78) அமோக வெற்றி பெற்றார்.
இவரது முழுப்பெயர் ஜோசப் ராபினெட் பைடன் ஆகும்.
துணை ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான பெண் தலைவர் கமலா ஹாரிஸ் (56) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா, ஜனவரி 20-ந் தேதி நடைபெறுவது மரபாக உள்ளது.
அந்த மரபுப்படி, தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கு பகுதியில் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா, நேற்று அமெரிக்க நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி) கோலாகலமாக தொடங்கியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம் என்பதால், அதற்கான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. அனைவரும் முக கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு விழா, ஜோ பைடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான ஏசு சபை போதகர் லியோ ஜெரேமியா ஓ டொனோவன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜோ பைடன் 127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் பேரில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதே போன்று அமெரிக்காவின் 49-வது துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சோனியா சோட்டாமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமலா ஹாரிஸ், தனது நெருங்கிய குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி நீதிபதி துர்கூட் மார்ஷல் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபிள்களின்பேரில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இந்த பதவி ஏற்பு விழா, முன் எப்போதும் இல்லாத வகையில் 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் நடைபெற்றது.
விழாவில், முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவர்களது மனைவிமார் மிச்செல்லி ஒபாமா, லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பதவி ஏற்பு விழாவில், விடைபெற்றுச்சென்ற ஜனாதிபதியான டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர், “நாங்கள் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும். இது முக்கியமான வார்த்தை” என கூறி வாழ்த்து தெரிவித்தார். அவர் அத்துடன் வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் விடைபெற்றுச்சென்ற துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், விழாவில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு பதிலாக அமெரிக்க தேசிய கொடிகள் இடம் பெற்றிருந்தன.
விழாவில் பிரபல பாடகி லேடி காகா என்று அழைக்கப்படுகிற ஸ்டெபானி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா தேசிய கீதம் பாடினார்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
ஜோபைடன் தனது கன்னிப்பேச்சில் கூறியதாவது:-
அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அமெரிக்க மக்கள் தங்களின் கடமை அறிந்து செயல்பட வேண்டும். நமக்கும், நமது குழந்தைகளுக்குமான சிறந்த உலகத்தை உருவாக்குவோம். பல அழுத்தங்களை கடந்து மக்களாட்சி மலர்ந்துள்ளது. ஒட்டுமொத்த மக்களுக்கான ஜனாதிபதியாக நான் இருப்பேன்.
கொரோனாவை வென்று மீள்வோம். அமெரிக்காவையும், அமெரிக்க ராணுவத்தைவும் கடவுள் காக்கட்டும். பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும். பெருந்தொற்று, வறுமை ஒழிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜோபைடன் பேசினார்.
Congratulating the USA on a new chapter of their democracy.
Best wishes to President Biden and Vice-President Harris.#InaugurationDay
— Rahul Gandhi (@RahulGandhi) January 20, 2021