ரைட்டர் விமர்சனம்: காவல்துறையில் பிரைட்டான பாதை அமைய டைட்டான கோரிக்கையில் அசத்திவிடும் பலே ரைட்டர்

0
299

ரைட்டர் விமர்சனம்: காவல்துறையில் பிரைட்டான பாதை அமைய டைட்டான கோரிக்கையில் அசத்திவிடும் பலே ரைட்டர்

நீலம் ப்ரொடக்ஷன்ஸ், கோல்டன்ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், ஜெட்டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், அபையானந் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் ரைட்டர்.
இதில் சமுத்திரகனி, இனியா, லிஸ்ஸி ஆன்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி.எம்.சுந்தர், கவிதா பாரதி, மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி குமார், திலீபன், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து ஃபிராங்ளின் ஜேக்கப் எழுதி இயக்கியுள்ளார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை:கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா, எடிட்டிங்: மணிகண்டன்; சிவகுமார், சண்டை:சுதேஷ், பாடல்கள்:யுகபாரதி, முத்துவேல்,நடனம்:சதீஷ் கிருஷ்ணன், உடை:முகமது சுபேர, ஒப்பனை:வினோத், கலை இயக்குனர் :ராஜா, தயாரிப்பு நிர்வாகம்:ஜெ.முருகன், சேத்தூர் இளங்கோ, ரவிதம்பி, நிர்வாகத்தயாரிப்பு: சஞ்சய், ரூபேஷ், இணை தயாரிப்பு- யு.எம்.ராவ், மக்கள் தொடர்பு:குணா, ரியாஸ்.

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணி புரியும் தங்கராஜ்(சமுத்திரகனி) ரைட்டராக வேலை செய்து கொண்டே போலீஸ்காரர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கு போட்டு அதற்காக அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் கோபமடையும் மேலதிகாரி  போஸ்வெங்கட் அவரை இழிவாக பேசி அடித்து சென்னைக்கு இடமாறுதல் செய்து விடுகிறார். இரண்டு மனைவிகளுடன் வாழும் ஒய்வு வெறும் வயதில் இருக்கும் தங்கராஜ் அவர்களை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார். அங்கே போலீஸ் அதிகாரி பெருமாள் (கவிதாபாரதி) அவரை விசாரணைக்காக விடுதியில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் பிஎச்டி படித்து கொண்டிருக்கும் மாணவர் தேவகுமாரை (ஹரிகிருஷ்ணன்) கண்காணிக்க காவலுக்கு அனுப்புகிறார். அதன் பின் தேவகுமார் எதற்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கார் என்ற காரணம் தெரியாமல் தவிக்கும் தங்கராஜ் உயர் அதிகாரிகளின் சொல்படி ஒவ்வொரு இடமாக மாற்றி தேவகுமாரை அடைத்து கண்காணிக்கின்றார். டெபுடி கமிஷனர் வற்புறுத்தலின் பேரில் பொய்யாக ஜோடனை செய்து சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேவகுமாரை அடைத்து அடித்து கையெழுத்து வாங்க முற்படுகின்றனர்.ஆனால் இதற்கு மறுக்கும் தேவகுமார் தன் அண்ணன் சேவியர்(சுப்பரமணிய சிவா) மூலம் வழக்கறிஞர் மருதமுத்துவை (ஜி.எம்.சுந்தர்) வாதாட வைக்கிறார். தேவகுமாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கராஜ் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? எதற்காக அப்பாவி மாணவரை சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்? உண்மையான காரணம் என்ன? உயர் அதிகாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க தங்கராஜ் போடும் திட்டம் என்ன? இறுதியில் தங்கராஜ் மற்றும் தேவகுமார் இருவரும் மாட்டிக் கொண்டார்களா? தப்பித்து வெளியே வந்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ரைட்டர் தங்கராஜாக சமுத்திரகனி, போலீஸ் நிலையத்தில் கடைநிலை ஊழியர்கள் அதிகாரமிக்க உயர் அதிகாரிகளிடம் எந்த அளவிற்கு அவமானப்படுத்தப்படுகின்றனர் என்பதை தன் நடை, உடை, பாவனை மூலம் வெளிப்படுத்தி தன் மனகுமறலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடங்கி போய் சொன்ன வேலையை செய்வதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார். தான் போட்டுக் கொடுத்த க்ரைம் சீன் தன் கண்எதிரே நடக்க அதிர்ச்சியில் உறைவதாகட்டும், தேவகுமாருக்கு தன் உயிரையே பணயம் வைத்து பல வழிகளில் உதவுவதாகட்டும், ஒய்வு பெறும் காலத்தில் நல்லதை செய்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணத்திலாகட்டும், தேவகுமாரை வற்புறுத்தியது போல் தன்னையும் பொய் சொல்ல வற்புறுத்தும் போது பொங்கி எழுந்து சுட்டு தள்ளுவதாகட்டும் ஆரம்பம் முதல் முடிவு வரை தங்கராஜாகவே வாழ்ந்துள்ளார் சமுத்திரகனி. போலீஸ் சங்க வேலைகளை தன்னால் முடிக்கமுடியவில்லை என்றாலும் அவரைப் போல ஒருவரை உருவாக்க எடுக்கும் முயற்சிகளில் வருங்காலத்தில் வெற்றி கிடைக்கும் என்ற கால விருட்சமாக நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சமுத்திரகனி. தன்னைத்தானே உருவாக்கிக்கொண்ட கலைச் சுயம்பு சமுத்திரகனி.

தேவகுமாராக ஹரி கிருஷ்ணன் தன்னுடைய பரம்பரையில் பிஎச்டி படிப்பு வரை சென்ற முதல் பட்டதாரி என்ற பெருமையை நிலைநாட்டுவதற்குள் ஏற்படும் பெரும் சிக்கல், ஆராய்ச்சி படிப்பிற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி தற்கொலை செய்து கொண்டவர்களை பற்றி கேட்கப்பட்ட தகவலால் பெரும் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு சித்ரவதை, மனஉளைச்சலில் சிக்கி இறுதியில் அப்பாவியாக கதற கதற இறந்து நல்லவனாக நிரூபிக்க முடியாத தப்பிக்க முடியாத விரக்தியில்  மனதை பதற வைத்து யதார்த்தமான நடிப்பால் அசத்தி விடுகிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் போலீஸ் சரண்யாவாக இனியா குதிரை சவாரி மீது அலாதி பிரியத்தால் குதிரையேற்ற அணியில் சேர விருப்பப்பட அவரின் வேலை விண்ணப்பத்தை உயர் அதிகாரி நிராகரிக்கிறார். தான் அவமானப்படுத்தப்படும் போது  உயர் அதிகாரியின் எதிரே குதிரையில் தைரியமாக வந்து கெத்து காட்டுவாது என்று அசத்தல் நடிப்பில் கண் முன்னே நிற்கும் கதையின் முக்கிய திருப்புமுனை கதாபாத்திரம்.

சமுத்திரகனியின் முதல் மனைவி லிஸ்ஸி ஆன்டனி குழந்தை பாக்கியம் இல்லாததால் இரண்டாவதாக மகேஸ்வரியை திருமணம் செய்துவைப்பது, சமுத்திரகனிக்கு தோள் கொடுக்கும் தோழி போல் அமைதியான சுமை தாங்கியாக வருகிறார்.

தேவகுமாரின் பாசமிகு அண்ணன் சுப்ரமணிய சிவா ஆக்ரோஷமான கிராமத்து மனுஷராக தன் தம்பிக்காக உருகுவதும், மனைவியால் தம்பி விரட்டப்பட வெகுண்டெழுவது அதன் பின் தம்பியை வேண்டா வெறுப்பாக படிக்க சென்னை செல்ல வழியனுப்பும் போது தந்தைக்கும் மேலாக அன்பை பொழிவது, தன் தம்பி போலீசில் சித்ரவதை படுவதை பார்க்க முடியாமல் கதறுவது, இறுதியில் சமுத்திரகனி மன்னிப்பு கேட்க நெகிழ்ந்து போவது என்று இறுதிக் காட்சி வரை கண் கலங்க வைத்து விடுகிறார். அருமையான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய சிவாவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது நிச்சயம் உண்டு. பாராட்டுக்கள்.

வக்கீலாக ஜி.எம்.சுந்தரின் விசாரணை வளையத்துக்குள் வரும் போது தான் உண்மையாக காரணம் புலப்படுகிறது. டிசியின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் இன்ஸ்பெக்டர் கவிதா பாரதி, தண்டனை கைதியாக மாட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்வதும், நக்கல் நையாண்டி ஒன் லைன் பஞ்ச் வசனத்தில் போலீசாரையே மடக்குவதும் ரொம்ப சீரியசான கதையில் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனியின் நடிப்பு சிறப்பு.

இவர்களுடன் வடநாட்டு பாஷையில் தமிழை பேசி அசத்தலான, அதிகாரமிக்க பதவியில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கும் டி.சி ஆக கவின் ஜெய் பாபு, லாயர் லேமுவேல், லக்கி குமார், திலீபன், போஸ் வெங்கட் மற்றும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் படத்தில் அனைவரின் பங்களிப்பும் படத்தின் முக்கிய புள்ளிகளாக ஒன்று சேர்ந்து முற்றுப்புள்ளிக்கு வழிவகுக்கிறார்கள்.

யுகபாரதி, முத்துவேல் பாடல்களில் கோவிந்த் வசந்தாவின் இசை அசத்தல் என்றால் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருந்து அதிர வைத்துவிடுகிறது.

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு திருவெறும்பூரில் ஆரம்பித்து திருவல்லிக்கேணி வரை செல்லும் போலீசின் விசாரணை என்று நிஜத்தை கண் முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார், காட்சிக்கோணங்களில் அசத்தியிருக்கிறார்.

எடிட்டர்- மணிகண்டன்; சிவகுமார், சண்டை-சுதேஷ் படத்திற்கு பலம் மட்டுமல்ல இரண்டாம் பாதியில் வலு சேர்த்துள்ளது.

காவல்துறைக்கு வெளியே மக்கள் மீது நடத்தும் அராஜகங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்  காவல்துறைக்குள்ளேயே பலர் அதிகார துஷ்பிரயோகத்தால் நசுக்கப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர், அதனால் மனஉளைச்சல், இயலாமை, தற்கொலை நிலைக்கு செல்லும் அவலம் என்று போலீஸ் நிலையத்திற்குள் நடக்கும் அடக்குமுறை பற்றியும், அப்பாவி இளைஞர் மாட்டிக்கொண்டால் வெளியே வரமுடியாத சிக்கலில் தவித்து செய்யாத குற்றத்தை சுமத்தி பலிகாடாக மாற்றும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளின் மனப்போக்கும், திமிர் தனத்தையும் அப்பட்டமாக தோலுரித்து காட்டி திரைக்கதையமைத்திருக்கிறார் இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப். போலீஸ் நினைத்தால் எது வேண்டுமானாலும் ஜோடனை செய்து நிரூபிக்க முடியும், அதிகாரத்தை பயன்படுத்தி சாதிக்க முடியும் என்ற கருத்தை மெய்பித்து, அந்த காவல்துறையிலும் அப்பாவி போலீஸ்காரர்கள் நல்லது செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை நாசூக்காக சொல்லியிருப்பதிலேயே ஜெயித்து காட்டியுள்ளார் இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப். அனைத்து மக்களுக்கும் சம உரிமைக்காக குரல் கொடுக்க சங்கங்கள் இருக்க போலீஸ்காரர்களுக்கு மட்டும் சங்கம் அமைக்க மறுக்கப்படுவதை இடித்துரைத்து விரைவில் அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் படத்தை தெளிவாக கொடுத்து வெற்றி வாகை சூடி பல விருதுகளையும் பெறுவார் இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப். முதல் பாதியில் பல கேள்விகளுக்கு ஆச்சர்யத்தோடு இரண்டாம் பாதியில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப்.

மொத்தத்தில் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், கோல்டன்ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், ஜெட்டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், அபையானந் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ள ரைட்டர் காவல்துறையில் பிரைட்டான பாதை அமைய டைட்டான கோரிக்கையில் அசத்திவிடும் பலே ரைட்டர்.