முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
179

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் தமிழகத்தின் 16வது கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின், அப்பாவு உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டசபை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர்.

முன்னதாக சட்டசபை தலைவர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்தார், துணைத்தலைவர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏவாக பதவிபிரமாணம் செய்து வைத்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி எம்.எல்.ஏ பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்.

மு.க ஸ்டாலினைத் தொடர்ந்து அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.