மின்சாரம் கொள்முதல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

0
106

மின்சாரம் கொள்முதல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

என்.எல்.சி 3×800 மெகாவாட் திட்டத்தை ஒடிசா மாநிலம், தலபிரா என்ற இடத்தில் அமைத்திட உள்ளது. அதில் 1500 மெகாவாட் தமிழ்நாட்டிற்கு மத்திய மின் அமைச்சகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கும் ஆண்டு 2026-27 என்று திட்டமிடப்படுள்ளது.

இந்த திட்டம் நிலக்கரி சுரங்கத்தின் அருகில் இருப்பதால் என்.எல்.சி சமன் செய்யப்பட்ட மின்கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.3.06 என நிர்ணயித்துள்ளது. 2026- 2027-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு 1500 மெகாவாட் மின் கொள்முதல் செய்வதற்கு என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடனான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தனி நிலக்கரி சுரங்கம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும், கூடுதலாக 2700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சோலார் எனர்ஜி கார்பரே‌ஷன் ஆப் இந்தியாவுடன் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின்கொள்முதல் கொள்கையின்படி ஏற்படும் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 1000 மெகாவாட் சூரிய சக்தியை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற விலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாங்குவதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரே‌ஷன் ஆப் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் 1000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டுக்கு 2022-2023ம் ஆண்டு இறுதியில் கிடைக்கபெறும்.

தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பவர் டிரேடிங் கார்பரே‌ஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் நான்கு நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.