மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து பயன்பெற வேண்டும் – மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் ருக்மணி
சென்னை, 80 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து பயன்பெற வேண்டும் என மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் திருமதி ருக்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்களில் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்திட்டங்கள், நேரு யுவகேந்திராவின் செயல்பாடுகள், வங்கிக் கடன் திட்டங்கள், நபார்டு வங்கியின் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.
10.01.2024 அன்று மத்தூர் பகுதியில் உள்ள நாகம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் திருமதி ருக்மணி இந்த வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் கலந்துக் கொண்டு மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர், கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் 80 சதவீத மானியத்தில் ட்ரோன்களை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு மானியத்துடன் வங்கிக் கடன் மூலம் ட்ரோன் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறைந்த செலவில் அதிக பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும், நேரமும் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை இணைச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.