பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு வயதுடைய நோயாளிகளுக்கு, ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை!

0
169

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு வயதுடைய நோயாளிகளுக்கு, ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை!

  • வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையின் நியூரோ மாடுலேஷன் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது!

சென்னை, பார்கின்சன் நோயால் (Parkinson’s Disease) பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு ஆழமான மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation – DBS) கருவி பதித்தல் அறுவை சிகிச்சையை புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரும், மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம் தலைமையில், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் (SIMS Hospitals) நரம்பியல் நிபுணர் குழு, வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சிகிச்சை 63, 40 மற்றும் 9 வயது கொண்ட நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது.

இந்த டி.பி.எஸ். சிகிச்சை இதுவரை வெவ்வேறு வயதுடைய 5 நோயாளிகளுக்கு சிம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், எல்லா வயதுடையோருக்கும் ஏற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் மூன்று நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள் மட்டும் எடுத்துக்காட்டாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி பதித்தல் என்பது ஒரு அறுவை சிகிச்சை முறை. உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் சில பகுதிகளைச் செயல்படுத்த சில மின்முனைகள் இதில் பொருத்தப்படுகின்றன. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழுவால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

“பார்கின்சன் நோய் என்பது உடல் இயக்கங்களைப் பாதித்து குறிப்பிடத்தக்க ஊனத்தை ஏற்படுத்தும் நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டி.பி.எஸ். (DBS) முறையை வழங்கிய நவீன அறிவியல் தொழில்நுட்பத்திற்கு நன்றி” என்று டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம் குறிப்பிட்டார்.

அரிதான நியூரோ மாடுலேஷன் (Neuro Modulation) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “டி.பி.எஸ். ஒரு சக்திவாய்ந்த சிகிச்சையாகும், இது மேம்பட்ட பார்கின்சனின் இயக்க அறிகுறிகள் மற்றும் டிஸ்டோனியா (Dystonia) போன்ற பிற இயக்கக் கோளாறுகள் மற்றும் மருந்துகளால் ஏற்படும் சில பக்க விளைவுகளை நிவர்த்தி செய்யும். பார்க்கின்சன் நோயாளிகளின் உடல் நடுக்கம், விறைப்புத்தன்மை, மந்தநிலை மற்றும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைக் குறைத்து, அவர்களின் அன்றாட அடிப்படை செயல்பாடுகளை மேம்படுத்தவும், தரமான வாழ்க்கையை நடத்தவும் இந்த சிகிச்சை உதவுகிறது.

மூன்று பார்க்கின்சன் நோயாளிகளுக்கு நாங்கள் தற்போது சிகிச்சை அளித்துள்ளோம். 9 வயதுடைய ஒரு குழந்தை, 40 வயதுடைய இளைஞர், 63 வயதுடைய முதியவர் ஆகியோருக்கு டி.பி.எஸ். அறுவை சிகிச்சை பலன் தந்துள்ளது. தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மெதுவாக, அதே நேரம் தனியாக, புதிய நம்பிக்கையுடன் மீண்டும் தொடங்குவதில் இவர்கள் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர். அவர்களின் மருத்துவ வரலாறு, நரம்பியல் இயக்கங்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan) மற்றும் பிற நரம்பியல் சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்ததில், மூன்று நோயாளிகளும் டி.பி.எஸ். சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன் காரணமாக அவர்களுக்கு டி.பி.எஸ். சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தோம். பார்கின்சன் நோயின் நிலை எதுவாக இருந்தாலும், எப்பொழுதும் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பார்கின்சனின் தீவிர நிலை, அதன் சிக்கல்களுக்கு டி.பி.எஸ். சிறந்த தீர்வை வழங்கும். மேலும் மருந்துகளின் அளவையும் பக்கவிளைவுகளையும் குறைக்க முடியும்” என்று கூறினார்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து, “டாக்டர் மீனாட்சிசுந்தரம் போன்ற நிபுணத்துவம் நிறைந்த நரம்பியல் நிபுணர், எங்கள் உயர் தகுதி வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். நரம்பியல் கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த நரம்பியல் பராமரிப்பு சேவைகளை வழங்க, கோவிட் தொற்றுநோய் பரவலின்போதுகூட, அவரது குழு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கியது. ஒரே இடத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைகள், மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய சிம்ஸ் மருத்துவமனையில் சர்வதேச நரம்பியல் பராமரிப்பு தரங்களையும் கடைபிடிக்கிறோம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்கவியல் நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த குழு எங்கள் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்றார். 

முதிய பார்கின்சன் நோயாளிக்கு சிகிச்சை:

ஓய்வு பெற்ற 63 வயது ஆண் நோயாளி ஒருவர், 10 ஆண்டுகளாக பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் முன்பு பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றிருந்தார். நடப்பதில் சிரமம், அன்றாட வேலைகளைச் செய்வதில் அதீத மந்தம் போன்ற கடுமையான சிரமத்துடன் இங்கே வந்தார். பார்கின்சன் நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டபோது, அவர் மூட்டுகளில் கட்டுப்பாடற்ற அசைவுகளை அனுபவித்தார். அவரால் தனித்து செயல்பட முடியவில்லை. அவரது வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் கடுமையான இயலாமை, நியூரோ மாடுலேஷனுக்கான தகுதியின் அளவுகோலைப் பூர்த்தி செய்ததால், அபாயங்கள் – நன்மைகள் பற்றிய விளக்கத்துடன் டி.பி.எஸ். சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. டி.பி.எஸ். சிகிச்சை நடைமுறைக்குப் பிறகு, அவர் தனது அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் தேறிவிட்டார். இப்போது எந்த உதவியும் அவருக்குத் தேவையில்லை. அவரது மருந்துகள் சரிசெய்யப்பட்டு, மருந்தின் அளவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இளம் ஐ.டி. பணியாளருக்கு பார்கின்சன் சிகிச்சை:

மென்பொருள் பொறியாளரான 40 வயது ஆண் நோயாளி இளம் வயதிலேயே பார்கின்சன் நோயால் 9 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவரால் சாதாரண அன்றாடப் பணிகளைக்கூட செய்ய முடியவில்லை. அவரது அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்பட்டது. அவரால் முன்புபோல் கணினியை இயக்க முடியவில்லை. இயலாமை அவரது தொழில் செயல்திறனைக் கடுமையாகப் பாதித்ததால், அபாயங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய விளக்கத்துடன் டி.பி.எஸ். சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. டி.பி.எஸ். நடைமுறையை வெற்றிகரமாக முடித்த பிறகு, அவர் பணிக்கு அலுவலகம் திரும்பியுள்ளார். கணினியை வழக்கம்போல் இயக்கவும், மென்பொருள் பொறியாளராக தனது வழக்கமான வேலையைச் செய்யவும் அவரால் முடிந்தது. அவரது மருந்து அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

குழந்தை பார்கின்சன் நோயாளிக்கு சிகிச்சை:

6 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த 9 வயது பள்ளி செல்லும் மாணவி ஒருவர், படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மூட்டு அசைவுகள் படிப்படியாக மெதுவடைந்து, எங்களிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தார். இந்த நோய் அவளது பெற்றோருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தியது. வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்க இயலாமை மற்றும் நியூரோ மாடுலேஷனுக்கான தகுதியின் அளவுகோல்களை அந்த சிறுமி பூர்த்தி செய்வதைக் கருத்தில் கொண்டு, டி.பி.எஸ். சிகிச்சை சார்ந்த அபாயங்கள் மற்றும் நன்மைகளை விளக்கினோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மெதுவாக குணமடைந்து இப்போது யார் உதவியும் இன்றி நடமாட முடிகிறது. தனது குழந்தை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் மருந்துகளின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது குறித்து சிறுமியின் அம்மா மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

இந்த நோயாளி முக்கியமானவர். ஏனென்றால் இது போன்ற இயக்கக் கோளாறுகள் உள்ள குழந்தைகள் டி.பி.எஸ். மூலம் பயனடைவதற்கும் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும். இதே நோய் கொண்ட மற்ற குழந்தைகளுக்கு இது நம்பிக்கையை அதிகரிக்கும்.