பாம்பன் பாலம் : ‘கடல்மீது அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குபாலம்’ – திறப்புக்கு தயார்!
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக பாம்பன் இரயில்வே பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு முன்பு வரை ராமேஸ்வரம் தீவுக்கு செல்ல மண்டபத்திலிருந்து கடல் வழியாக படகை பயன்படுத்தி பொதுமக்கள் சென்று வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது மண்டபம் – இராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இரயில் பாலம் உருவாக்க திட்டமிடப்பட்டது. 1870-ம் ஆண்டுகளில் பாம்பன் பாலன் குறித்த திட்டங்கள் ஆங்கிலேயர்களிடம் மும்முரமாக ஆலோசனையில் இருந்தது.
கடலுக்கு நடுவே பாலம் கட்டும்போது கப்பல் வழித்தடத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாலம் கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொண்டனர். அதன்படி, பாம்பன் கடலின் மேலே இரயிலும், கீழே கப்பலும் செல்லும் வகையில் ‘டபுள் லிவர் கேட்லிவர்’ முறையில் பாலம் கட்ட முடிவு செய்து அதற்கேற்ப திட்டங்களை வடிவமைத்தனர். குறிப்பாக, வர்த்தக போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பாலம் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்றது.
இதையடுத்து, 1911-ம் ஆண்டு பழைய பாம்பன் பாலம் கட்டும் பணி தொடங்கி 1914-ம் ஆண்டு முடிவடைந்தது. பாலத்தில் 2 ஆயிரத்து 600 டன் இரும்பும், 5 ஆயிரம் டன் சிமெண்டு கலவையும் பயன்படுத்தப்பட்டது.
பாம்பன் ரயில் பாலம் பணிகள் முடிவடைந்து 1914-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், ராமேஸ்வரம் தீவு பெருமளவு வளர்ச்சி அடையத் தொடங்கியது. பழைய பாம்பன் பாலத்தில் ஆரம்பத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
1988-ம் ஆண்டு சாலைப் போக்குவரத்திற்காக பாம்பனில் பாலம் கட்டப்பட்டது. ஆனாலும், கடலின் நடுவே ரயிலில் பயணிக்கும் அனுபவம் சுற்றுலாப்பயணிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. கடலுக்கு நடுவில் உள்ள பழைய பாலத்தில் குறைவான வேகத்திலேயே இரயில்கள் இயக்கப்பட்டது. 2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை ‘மீட்டர் கேஜ்’ ரயில் பாதையாக இருந்தது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு அகல ரயில்பாதையாக இது மாற்றப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டது.
இதற்கிடையே, பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்‘ அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய இரயில் பாலம் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய இரயில் பாலம் கட்டுவதற்கான பணிகளுக்கு 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தநிலையில் புதிய இரயில் பாலம் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்து, தற்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
புதிய பாம்பன் பாலத்தில் மொத்தம் 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தைவிட புதிய ரயில் பாலம் 3 மீட்டர் உயரமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரமாக இந்த பாலம் உள்ளது.
ஒவ்வொரு தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு பகுதி (கர்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரயில் பாதையை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ரயில் விகாஷ் நிகாம் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே புதிய ரயில் பாலத்தை கட்டி முடித்துள்ளது.
ரயில்வே பாலத்தின் குறுக்கே கப்பல்கள் எளிதாக செல்லும் வகையில், முழு தானியங்கி ‘எலெக்ட்ரோ-மெக்கானிக்கல்’ அமைப்பு கொண்ட செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக பாலத்தை உயர்த்துவதன் மூலம் பெரிய கப்பல்கள் கடல் வழியாக தடையின்றி செல்ல முடியும். கப்பல்கள் எளிதாக செல்லும் வகையில் செங்குத்து தூக்கு பாலம் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே நடுக்கடலில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. 3 நிமிடத்தில் திறந்து 3 நிமிடத்தில் மூடப்படும் வகையில் செங்குத்துபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக பாம்பன் புதிய இரயில் பாலம் கம்பீரமாய் நிற்கிறது மிக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் திறப்புக்கு தயாராக உள்ளது.