நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு நாளை வரை விநியோகம்!

0
114

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு நாளை வரை விநியோகம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றை 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, ஜன.9-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றுமுதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் விதமாக, நாளை வரை (ஜன.18) பொங்கல் தொகுப்பை வழங்க நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே நியாயவிலைக் கடை பணியாளர்கள் கூறும்போது, ‘‘பொங்கல் தொகுப்பில் ரொக்கத் தொகை வழங்காததால், பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. எனவே, 20 சதவீதம் பேர் வரை வாங்கவில்லை. அரிசி, சர்க்கரையை யாரும் வாங்காவிட்டால், அதற்கான கணக்கு இருப்பில் சரிகட்டப்படும். ஆனால், கரும்பு விநியோகிக்கப்படாவிட்டால், அந்த தொகை அதாவது கரும்புக்கு ரூ.35 வீதம் நாங்கள் செலுத்த வேண்டும். பொங்கல் முடிந்தபின் கரும்பை எங்கு விற்க முடியும். இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என்றனர்.