நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்!
சென்னை: தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான யூ-டியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும், என் கணவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார்.
என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார்தான், அந்த சேனலை தொடர்புகொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே அவர் தவறாக பேசினார். பின்னர் அந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நானும், எனது கணவரும் எங்களது வக்கீல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீசு அனுப்பியுள்ளோம்.
அதன்படி வடபழனி மகளிர் போலீஸ் நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் அந்த நோட்டீசின் நகல் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அதில் கூறியுள்ளார்.