‘தேசிய ஆள்தேர்வு முகமை, மத்திய அரசுப் பணிகளை விரும்புபவர்களுக்கான வரம்’
சென்னை, தேசிய ஆள்தேர்வு முகமை பற்றிய இணையக் கருத்தரங்கு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை நடத்தின.
தலைப்பைக் குறித்து விரிவாகப் பேசிய திரு. பி. காசிவிஸ்வநாதன், தலைவர், ரயில்வே ஆள்தேர்வு வாரியம், பெங்களூரு, “ரயில்வே ஆள்தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆள்தேர்வுக்கான பூர்வாங்கத் தேர்வுகளை இணைக்கும் செயல்முறை, இந்த அமைப்புகளையும் விண்ணப்பதாரர்களுக்கும் பெரிதும் உதவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்,” என்றார்.
தேசிய ஆள்தேர்வு முகமையால் நடத்தப்பட்ட பொது தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மத்திய அரசுப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என்று அவர் மேலும் தெரிவித்தார். “ரயில்வே ஆள்தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவை தற்போது தனித்தனியாகத் தேர்வுகளை நடத்தி வரும் நிலையில், தேசிய ஆள்தேர்வு முகமையின் பொதுத் தகுதித் தேர்வு இந்த அமைப்புகளின் சுமையைப் பெருமளவில் குறைக்கும். மேலும், தங்களது நேரம், பணம் மற்றும் சக்தியை விண்ணப்பதாரர்கள் சேமிக்கலாம். இந்தத் தேர்வுகளுக்காக தனித்தனியாக விண்ணப்பிப்பதற்கு அவர்களுக்கு அதிக நேரம், பணம் மற்றும் சக்தி தேவைப்பட்ட நிலையில், பொது தகுதித் தேர்வுக்கானப் பாடத்திட்டம் அனைத்து வாரியங்களுக்கும் பொதுவானது என்பதால், ஒற்றைத் தேர்வு முறையின் மூலம் தயாரிப்பின் மீது அதிக கவனத்தை அவர்கள் செலுத்த முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
தேசிய ஆள்தேர்வு முகமை மற்றும் பொதுத் தகுதித் தேர்வின் பல்வேறு நன்மைகளைக் குறித்து பேசிய திரு. ஜி. சீனிவாச ரெட்டி, தலைவர், ரயில்வே ஆள்தேர்வு வாரியம், சென்னை, “கணினி சார்ந்த இணையப் பொது தகுதித் தேர்வுக்கான மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும். இதன் மூலம் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் வாழ்பவர்களின், சுமை குறையும். இல்லையென்றால் அவர்கள் 300 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகப் பயணம் செய்யவேண்டியதிருக்கும். தேர்வு அமைப்பின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை இது அதிகரிப்பதோடு, திறமையான மற்றும் கடினமாக உழைக்கக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கும்,” என்றார்.
ரயில்வே ஆள்தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது தொழில்நுட்பம் சாராத பணிகளுக்காக நடத்தப்பட்டு வரும் ஆள்தேர்வுக்கு பட்டதாரி, மேல்நிலை (12-ஆம் வகுப்பில் தேர்ச்சி) மற்றும் உயர்நிலை (10-ஆம் வகுப்பில் தேர்ச்சி) ஆகிய மூன்று நிலைகளில் தனித்தனி பொதுத் தகுதித் தேர்வை தேசிய ஆள்தேர்வு முகமை நடத்தும். பொது தகுதித் தேர்வில் செய்யப்பட்ட சலித்தலின் அடிப்படையில், தொடர்புடைய ஆள்தேர்வு முகமைகளால் தனிப்பட்ட சிறப்பு அடுக்குகளில் (II, III போன்றவை) தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் பொதுவானதாகவும், நிலையானதாகவும் இருக்கும். ஒவ்வொரு தேர்வுக்கும் வெவ்வேறான பாடங்களைத் தனித்தனியாக தற்போது படிக்க வேண்டியிருப்பதால், விண்ணப்பதாரர்களின் சுமையை இது பெருமளவில் குறைக்கும், என்று அவர் கூறினார்.
ALSO READ:
‘National Recruitment Agency, a boon for aspirants seeking Central Government jobs’
பி மற்றும் சி பிரிவுகளுக்காக (தொழில்நுட்பம் சாராத) வருடத்துக்கு இரண்டு முறை பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, விண்ணப்பதாரர்கள் அதில் பெறும் மதிப்பெண் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும். ஆனால், விண்ணபதாரர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரிக்க நினைத்தாலோ அல்லது அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினாலோ, அதற்கு எந்தத் தடையும் இல்லை. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையிலான கேள்விகள் பல மொழிகளில் கேட்கப்பட்டு பூர்வாங்கத் தேர்வு நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி நிபுணர் திரு. பாலகுரு பேசுகையில், வருடம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில் கவனம் செலுத்தலாம் என்பதால் விண்ணப்பதாரர்களின் மன அழுத்தத்தைப் பொதுத் தகுதித் தேர்வு முழுமையாகக் குறைக்கும் என்றார். பல தடவை விண்ணப்பிக்கும் சுமையையும் இது குறைக்கும் என்று அவர் கூறினார்.
தலைமை உரை ஆற்றிய திரு. எஸ். வெங்கடேஸ்வர், தலைமை இயக்குநர் (தென் மண்டலம்), தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், திறமையானவர்களுக்குப் பயனளிக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியவர்களின் நேரம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் தேசிய ஆள்தேர்வு முகமை இந்திய அரசின் புரட்சிகரமான நடவடிக்கை என்றார். தங்களுக்கு விருப்பமான மொழியில் தேர்வு எழுதலாம் என்பது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கூடுதல் நன்மை, என்று அவர் கூறினார்.
தொடக்க உரை ஆற்றிய திரு. வி. பழனிச்சாமி, இயக்குநர், அகில இந்திய வானொலி, சென்னை, பொது தகுதித் தேர்வு ஒரு வாய்ப்பு மற்றும் வரமென்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் போன்ற விவரங்களை அடங்கிய வினா வங்கியின் உருவாக்கம் விண்ணப்பதாரருக்கு கூடுதல் பலனளிக்கும், என்று அவர் கூறினார்.
முன்னதாக, திரு. குருபாபு பலராமன், இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. ஜெ. காமராஜ், இணை இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, நன்றியுரை ஆற்றினார்.