“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்..” : காவல்துறைக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
70

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்..” : காவல்துறைக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் முற்பகல் கூட்ட நிறைவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் மற்றும் அலுவலர்களும் நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரக்கூடிய சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை, இந்தப் பணியில் நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும் சுருக்கமாக, அதே நேரத்தில் தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

சட்டம்-ஒழுங்கு என்பது காவல் துறையின் பணி மட்டுமல்ல. மேலும், இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் மட்டுமல்ல. நமது மாநிலத்தினுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையினருடைய கல்வி, வேலைவாய்ப்பு என நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பரிணாமத்தையும் நிர்ணயிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தத் தருணத்தில் உங்களுக்கெல்லாம் மீண்டும் வலியுறுத்திக் கூற நான் விரும்புகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், காவல் துறை கண்காணிப்பாளர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான மாதாந்திரக் கூட்டத்தை மிகுந்த கவனத்துடன் தவறாமல் நீங்கள் நடத்திட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பிரச்சனையால் இந்தக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை, எனவே, இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மேலும் வாரந்தோறும் சட்டம்-ஒழுங்கு குறித்து நுண்ணறிவுப் பிரிவைச் சார்ந்த தகவல்கள் குறித்து கலந்தாலோசனையும் நீங்கள் தவறாமல் நடத்த வேண்டும்.

என்னுடைய அடுத்த ஆலோசனை என்னவென்று கேட்டால், நீங்கள் உங்கள் மாவட்டத்தில் Dash Board ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடைபெறுகிற சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரும் கூட்டங்களில் ஆராய்ந்து முழுமையாக அதற்கான தீர்வு காண வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும், குற்றங்களும் நிகழ்ந்து முடிந்த பின்பு அவற்றைத் தீர்ப்பதற்கும், புலனாய்வு செய்வதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட, அவை நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகள் தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். எனவே, நமது வெற்றி என்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதிலோ, குற்றங்களை கண்டுபிடிப்பதிலோ இருப்பதைவிட, அவை, மக்களை பாதிக்காத வகையில் தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து பலமுறை நான் செய்தும் காட்டியிருக்கிறேன், அதையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். இதை நான் மீண்டும் சொல்வதற்குக் காரணம், வருங்காலத்திலும் இந்த நிலை தொடர வேண்டும், தொடர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நான் உங்களுக்கு இறுதியாகச் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம்-ஒழுங்கினைப் பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.” என உரையாற்றியுள்ளார்.