தலைவாரி பூச்சூடி பாடலை ஆரி அர்ஜுனன் வெளியிட்டது ஏன் ? தாய்நிலம் இயக்குநர் அபிலாஷ் பெருமிதம்
நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது.
இந்தப் படத்தை மூத்த இயக்குநர் தம்பி கண்ணாந்தானம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அபிலாஷ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “தலைவாரி பூச்சூடி” என்கிற கவிதை, பாடலாக இடம் பெற்றுள்ளது. இன்று உலக இசைத் தினத்தை முன்னிட்டு இந்தப்பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.
பாடலை நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடுகிறார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இதை வெளியிடுகின்றனர்.
இந்த பாடல் குறித்தும், இன்றைய தினம் அது வெளியிடப்பட்டது குறித்தும் இயக்குநர் அபிலாஷ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்..,
“தந்தை-மகள் பாசத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தாலும் பெண் கல்வியின் அவசியம் குறித்தும் இந்தப்படம் வலியுறுத்துகிறது. எனவே அந்த சூழலுக்கு ஏற்றவிதமாக ஒரு பாடலை எழுதி தருமாறு கவிஞர் பழனிபாரதியிடம் கேட்டோம். அதற்கு அவர் இந்த சூழலுக்கு, அதுவும் பெண் கல்வியை மையப்படுத்தும் இந்தக் கதைக்கு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘தலைவாரிப் பூச்சூடி’ பாடலைத் தவிர வேறு ஒரு பாடல் பொருத்தமாக அமையாது… எனவே அவரது கவிதையையே நாம் பயன்படுத்துவோம் எனக் கூறினார். அதையடுத்தே பாவேந்தரின் கவிதை வரிகளை பாடலாக மாற்றினோம். மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் “தாய் நிலம்” படத்துக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப்பாடலுக்கு அருமையான இசையை வழங்கியிருக்கிறார்..
ஒவ்வொரு வருடமும் உலக இசைத் தினத்தை முன்னிட்டு ஒரு படத்தின் சிறந்த பாடலை சரிகம நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த “தலைவாரிப் பூச்சூடி” என்கிற பாடலைக் கேட்டவுடன், இதையே இந்த வருடத்திய பாடலாக வெளியிடலாம் எனக் கூறினார்கள்.. அந்தவகையில் இந்த பாடலை இசைத் தினத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரெட்டைச்சுழி படத்தில் நடித்த சமயத்தில் இருந்தே ஆரி எனது நீண்டகால நண்பர். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் பற்றி உருவாகியுள்ள இந்தப்படத்தின் பாடலை அவர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கூறினேன்.. இதைவிட வேறு என்ன எனக்கு முக்கியமான வேலை எனக் கூறி சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்தப்படத்தின் துவக்கத்தில் பார்வையாளர்களிடம் கதை பற்றி அறிமுகப்படுத்துவதற்கு, ஈழத்தமிழர்கள் பற்றி நன்கு அறிந்த, அவர்களது உணர்வுகளையும் வலிகளையும் தெரிந்த ஒரு குரல் தேவைப்பட்டது. ஆரி அர்ஜுனன் ஈழத்தமிழ் உணர்வாளர் என்பதுடன் ஈழத்தமிழ் பெண்ணையே திருமணமும் செய்துகொண்டவர். அந்தவகையில் அதற்கும் ஆரி அர்ஜுனனே குரல் கொடுத்துள்ளார்.
அதேபோல மலையாள திரையுலகில் எனது குருநாதர் தம்பி கண்ணாந்தானம் மீது அபிமானம் கொண்ட இளம் நடிகர்களான பஹத் பாசில், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, டொவினோ தாமஸ், இயக்குநர் லால்ஜோஸ், பின்னணிப் பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த பாடலை வெளியிடுகின்றனர்” எனக் கூறினார் இயக்குநர் அபிலாஷ்..