தமிழ்நாட்டில் கல்விக்கான முதல் மெய்நிகர் ஆய்வகம், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கம்!

0
360

தமிழ்நாட்டில் கல்விக்கான முதல் மெய்நிகர் ஆய்வகம், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கம்!

·       இந்தியாவில் ‘பகிர்ந்து கொள்ளப்படும் 3டி மெய்நிகர் ஆய்வகம்’, மெட்டாவெர்ஸில் தொடங்கப்படுவது இதுவே முதன்முறை!
·       இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. திரு. உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்!

சென்னை, ஜூலை 04, 2022

சென்னையை மையமாகக் கொண்ட விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality) ஸ்டார்ட்அப்  நிறுவனமான  மெய்நிகரா (Meynikara), சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஐந்து மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஆய்வகமான மெட்டா கல்வியை (Meta Kalvi) அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக, மெட்டாவெர்ஸ் (Metaverse) எனப்படும் பகிர்ந்து கொள்ளப்படும் 3டி மெய்நிகர் சூழலில் (Shared 3D Virtual Environment), மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா சிறப்பு விருந்தினர்களுடன் நடைபெற்றது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். நிகழ்விற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் உயர் தொழில்நுட்பப் பள்ளியை திரு. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிறகு மாணவர்களுடன் இணைந்து ஹெட்செட் அணிந்து தாமும் பாடங்களை ஆர்வமுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர்) தொழில்நுட்பத்தில் பார்த்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலினும் மெட்டாவெர்ஸில் தோன்றி உரையாற்றுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி நிலைக் குழுத் தலைவர் திரு. பாலவாக்கம் டி. விஸ்வநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் (ஒர்க்ஸ்) திரு. என். சிற்றரசு, முதன்மை கல்வி அலுவலர் திரு. மார்க்ஸ்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் புதிய கற்பித்தல் – கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை மெய்நிகர் உருவாக்கியுள்ளது. சிக்கலான அறிவியல் கருத்துகளை கற்பிப்பதற்கான ஒரு புதிய கல்வி முறையை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் முழுமையான, கற்பனையான கற்றல் சார்ந்த அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால், மெய்நிகர் ஆய்வகத்துக்கான சாத்தியம் ஒப்பிட முடியாததாகவும் இணையற்றதாகவும் தோன்றுகிறது. இந்தத் தொழில்நுட்ப வாய்ப்பை பரவலான மக்கள் பெறக்கூடிய வகையில் மாற்றுவதில்தான் சவால் அடங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக ஐந்து மாநகராட்சிப் பள்ளிகளில் ‘மெட்டா கல்வி’ மூலம் தொழில்நுட்ப-கல்விப் புரட்சியை ஏற்படுத்த, மெய்நிகரா நிறுவனம் தமிழக அரசுடன் கைகோர்த்துள்ளது.

மெய்நிகரா நிறுவனத்தின் சமூக பங்களிப்பு (சி.எஸ்.ஆர்.) முயற்சியாக தொடங்கப்பட்ட மெட்டா கல்வி மெய்நிகர் ஆய்வகம், தமிழ்நாட்டின் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் பாடங்களின் முக்கிய பகுதிகள், கருத்துகளுக்கான மெய்நிகர் கற்றல் முறையை (Virtual Reality Learning Method – VRLM) வழங்குகிறது.

இந்த வசதி மாநிலக் கல்வி வாரியத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சார்ந்து ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சியிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு படிப்படியாக மெட்டா கல்வி ஆய்வக வசதி  ஏற்படுத்தப்படும். அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் புதிய தலைப்புகள், பாடங்கள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும்.

மெய்நிகரா இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ரகுராமன் ரவி இந்தத் திட்டம் குறித்துக் கூறுகையில், “பள்ளிகளில் உள்ள மெய்நிகர்  ஆய்வகங்கள் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் கற்பனையான கற்றல் அனுபவத்தை வழங்கும். எங்கள் மெய்நிகர் கற்றல் முறை கற்பனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஊக்குவிக்கப்படும், மாணவர்களுக்கு யதார்த்தமான, மறக்கமுடியாத கல்வி அனுபவங்களையும் வழங்கும். இந்திய கல்வி முறையில் ‘மெட்டா கல்வி’ புரட்சியை ஏற்படுத்த உள்ளது. மெட்டா கல்வி என்பது கல்வித் துறையில் அடுத்த தலைமுறை புரட்சியாகும். இது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்தும்.

மெட்டா கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், கல்வி அமைப்பில் மெய்நிகர் ஆய்வகங்களையும் சேர்ப்பதில் தமிழ்நாடு ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். விரைவிலேயே தனியார் பள்ளிகளும் இந்தத்  தொழில்நுட்பத்தை விரைவாகவும் பரவலாகவும் ஏற்றுக்கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மெய்நிகர் கற்றல் முறையை மேம்படுத்துவதில் நாங்கள் முன்னணி வகிக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எல்லாவிதமான பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் நியாயமான கட்டணத்தில் ‘மெட்டா கல்வி’யை வழங்குவதில் மெய்நிகரா நிறுவனம் உறுதியாக உள்ளது. மாணவர்கள் எப்படிப்பட்ட உள்ளடக்கங்களைப்பெறலாம் என்பது முழுமையாக ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த ஆசிரியர்களுக்கு மெய்நிகரா நிறுவனம் பயிற்சி அளிக்கும். ஒவ்வொரு மாணவரின் கற்றல் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு ஆசிரியர்களுக்கு ஒரு டாஷ்போர்டும் இருக்கும்” என்றார்.

மெய்நிகர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் மெய்நிகரா ஒரு முன்னோடி நிறுவனமாகும். கல்வி, சுகாதாரம், தொழில்துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கமுள்ள 30+ இளைஞர்கள் கொண்ட குழு உதவியுடன் இது செயல்படுகிறது. எக்ஸ்டெண்டட் ரியாலிட்டியில் (Extended Reality – XR) நிபுணத்துவம் பெற்றுள்ள இந்நிறுவனம், முழுமையான டிஜிட்டல் பரிமாற்ற சேவைகள் மூலம் பயனர்களுக்கு சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்க உறுதிகொண்டுள்ளது.