தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி புரிகிறார்… ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ரோஜா பாராட்டு

0
269

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி புரிகிறார்…

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ரோஜா பாராட்டு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி அருகே அருள்மிகு சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடைபெற்ற மகாசிவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி பல சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் நகரி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுருட்டப்பள்ளி கோவில் அறங்காவல் குழு தலைவர் ஏவிஎம் முனி சேகர் ரெட்டி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், அகத்தீஸ்வரர் பள்ளிகொண்டேஸ்வரர் சர்வமங்கள தாயாரையும், தாம்பத்திய தட்சிணாமூர்த்தியையும் நந்தி பெருமானையும் வழிபட்ட நடிகை ரோஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் நடைபெற்று வரும் சர்பஞ்ச் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சிறப்பாக வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்கிறது என்றும் சர்பஞ்ச் தேர்தலில் 90 சதவீதம் இடத்தை தங்களது கட்சி கைப்பற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுருட்டப்பள்ளி கோவில் அறங்காவல் குழு தலைவர் ஏவி எம் முனி சேகர் ரெட்டி தலைமையில் ரோஜாவுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

மேலும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் திட்டங்கள் மக்களை எவ்வித தங்கு தடையுமின்றி சென்றடைவதால் இந்த வெற்றி வாய்ப்பு சாத்தியமாகி உள்ளதாகவும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நடிகை ரோஜா தெரிவித்தார்.

பின்னர் அவரிடம் தமிழக அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் பிசியாக இருப்பதால் தமிழக அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறக்கும்வரை இபிஎஸ் யார் என்று தெரியாது என்றும் கூறியவர், தற்போதைய முதலமைச்சர் இபிஎஸ் சிறப்பாக ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மக்களிடையே நற்பெயரை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளதாகவும் நடிகை ரோஜா தெரிவித்தார்.