தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்

0
200

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.

தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 86 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.