சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு

0
330

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரில் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 2015 முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டி முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பதை மாற்றி ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோவுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.