சர்வதேச மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன? இந்த ஆண்டின் சிறப்பு இதுதான்!

0
186

International Women’s Day : சர்வதேச மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன? இந்த ஆண்டின் சிறப்பு இதுதான்!

2022ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று, `நாளை நிலையான உலகத்திற்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற அடிப்படையின் கீழ் கொண்டாடப்படவுள்ளது

2022ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று, `நாளை நிலையான உலகத்திற்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற அடிப்படையின் கீழ் கொண்டாடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, `நாளை நிலையான உலகத்திற்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற பொருளின் கீழ், மார்ச் 8 அன்று, சர்வதேச மகளிர் தினத்தை, ஐக்கிய நாடுகளுடன் இணைந்து கொண்டாடவும், காலநிலை மாற்றத்திற்கான பெண்களின் அழைப்பை ஏற்கவும்’ எனத் தெரிவித்துள்ளது.

`காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் இங்கு நிலவும் பாலின பேதங்களை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும், பெண்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் ஆபத்தை நோக்கி நகர்த்துவதால், பெண்களும் பெண் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் பெண்கள் அதிகளவில் இயற்கை வளங்களை நம்பி வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவை குறைவாகவே கிடைப்பதோடு, பெண்கள் உணவு, நீர், எரிபொருள் முதலானவற்றைப் பெறுவதில் அவர்களின் பொறுப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது’ என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளதோடு, காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, தீர்வை நோக்கி நகர்வது முதலான பணிகளை மேற்கொள்வது பெண்களின் தலைமை இன்றியமையாதது எனவும் கூறியுள்ளது.

மேலும், `நிலையான பூமிக்காகவும், பாலின சமத்துவ உலகிற்காகவும் தீர்வுகளை உலகின் மக்கள்தொகையில் பாதி பேரை உள்ளடக்காமல் உருவாக்க முடியாது’ என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் போது, பெண்கள் தங்கள் சாதனைகள், பங்களிப்பு, தலைமைப் பண்பு முதலானவற்றிற்காகக் கொண்டாடப்படுகின்றனர்.

மகளிர் தினத்தின் வரலாறு…

சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

எனினும், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் 1848ஆம் ஆண்டு அடிமை எதிர்ப்புப் போராட்டங்களின் போது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டன. அமெரிக்கப் பெண்களான எலிசபெத் கேடி ஸ்டேண்டன், லூக்ரீசிய மோர் நூற்றுக்கணக்கான மக்களோடு கூடி, பெண்களின் உரிமைக்காக மாநாடு நடத்தினர்.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு, பணிச்சூழல்களை எதிர்த்துப் போராடிய பின்னலாடை தொழிலாளிகளான பெண்களைக் கௌரவப்படுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.

1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையின் போது `உணவு, அமைதி’ ஆகியவற்றிற்காக போராடினர்; இது க்ரீகோரியன் நாள்காட்டியின்படி, ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 8 என்று கணக்கிடப்படும் நாளாக இருந்ததால், இந்த நாளின் சர்வதேச மகளிர் தினம் காலப்போக்கில் அனுசரிக்கப்படத் தொடங்கியது.

கடந்த 1975ஆம் ஆண்டு சர்வதேச மகளிருக்கான ஆண்டு எனவும், அன்று முதல் மார்ச் 8 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிப்ரவரி 13 அன்று தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடியவரும், கவிஞருமான சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, இந்த நாள், `தேசிய மகளிர் தினமாகக்’ கடைப்பிடிக்கப்படுகிறது.