சட்டசபை கூட்டம் நடைபெறுவதையொட்டி கலைவாணர் அரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கட்டுப்படுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மெரினா கடற்கரையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார். இதையடுத்து காந்தி சிலை அருகே பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். வாகன ஓட்டுனர்களிடம் துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கும் கலைவாணர் அரங் கம் உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்படும். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.