கான்கிரீட்டுகளுக்கு இடையே தெர்மோகோல் பயன்படுத்தி அடுக்குமாடி வீடு: பூகம்பத்தை தாங்கும் என ரூர்கே ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
வெப்ப பாதுகாப்புடன், பூகம்பத்தை தாங்கக்கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்காலத்தில் தெர்மோகோல் பயன்படுத்தப்படலாம், இது கட்டுமான பொருட்களை உருவாக்குவதற்கான ஆற்றலை சேமிக்க உதவும் என ரூர்கே ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அடுக்கு கான்கிரீட்டுகளுக்கு இடையே, விரிவுபடுத்தப்பட்ட பாலிஸ்ட்ரீன்(EPS) என்ற தெர்மோகோலை, சாண்ட்விச் போல பயன்படுத்தப்படும் முறையை ரூர்கே ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் மூலம், 4 மாடி வரை கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்ப அதிர்வுகளை தாங்க முடியும்.
இரண்டு அடுக்கு கான்கிரீட்டுகளுக்கு இடையே தெர்மோகோலை வைத்து சுற்றிலும் வெல்டிங் செய்யப்பட்ட கம்பி வலைகள் மூலம் கான்கிரீட் அமைக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். பூகம்பத்தின் போது ஒரு கட்டிடத்தின் மீது செலுத்தப்படும் சக்தி, மந்தநிலையின் விளைவு காரணமாக எழுகிறது என்றும் இது கட்டிடத்தின் நிறை சார்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். கட்டிடத்தின் நிறையை குறைப்பதன் மூலம், பூகம்பத்தை தெர்மோகோல் தாங்குகிறது.