கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகரும் அம்மா நியாயவிலை கடை: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்

0
259

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகரும் அம்மா நியாயவிலை கடை: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி, செப். 27

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஊராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நகரும் நியாயவிலை கடை வாகனத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 20.03.2020 அன்று பொதுமக்களின் சுமைகளை களையும் பொருட்டு பொதுமக்கள் குடியிருப்புகளுக்கே நேரடியாக சென்று அத்தியாவசிய நியாயவிலை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தினை அறிவித்து 21 ந் தேதி சென்னை மண்டலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடைகளின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 16 அம்மா நகரும் நியாயவிலை கடைகளின் சேவையினை 3,570 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தி.க.பிரபாகரன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, துணைபதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி.மணிமறான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.