ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் ரஃப்தார் ஃபார்முலா ரேசிங் குழு முதன்முறையாக மின்சார பந்தயக் காரை (Electric Racing Car) அறிமுகம் செய்துள்ளது
RFR 23 என்றழைக்கப்படும் இந்த கார், மின்சார உந்துதலால் அதிக சக்தியைக் கொண்டிருப்பதால் வேகம் மற்றும் சுற்று ஓட்டத்தில் முந்தைய உள்எரிப்பு இயந்திர (Internal combustion Engine) மாதிரியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்)மாணவர்கள் இன்று (28 நவம்பர் 2022) இங்குள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இக்கல்வி நிறுவனத்தில் தயாரான முதலாவது மின்சார அடிப்படையிலான காரை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
முழுக்க முழுக்க டீம் ரஃப்தார்(Team Raftar)மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘RF23’ ஃபார்முலா கார், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை என இந்தக் குழுவினர் ஓராண்டாக மேற்கொண்ட செயல்முறையின் விளைவாகும்.
செயல்திறன் அடிப்படையில், இது மின்சார உந்துதலால் அதிக சக்தியைக் கொண்டிருப்பதால் வேகம் மற்றும் சுற்று ஓட்டத்தைப் பொறுத்தவரை முந்தைய உள் எரிப்பு இயந்திர (Internal Combustion Engine) மாதிரியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகின் மிகச்சிறந்த ஃபார்முலா மாணவர் குழுவாக உயர்ந்திட வேண்டும் என்ற இலக்குடன் டீம் ரஃப்தார் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள், நிலையான தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள இக்குழு இந்தியாவில் ஃபார்முலா மாணவர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க விரும்புகிறது. வடிவமைத்தல், உருவாக்குதல், ரேசிங் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஃபார்முலா மாணவர் குழுவான ரஃப்தார் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான ஃபார்முலா மாணவர் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 மாணவர்களைக் கொண்ட டீம் ரஃப்தார், ஐஐடி மெட்ராஸ்புத்தாக்க மையத்தின்(Centre for Innovation)போட்டிக் குழுக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தொழில்துறை தரத்தில் நடைமுறைகளை மேம்படுத்தவும், பொறியியல் மாணவர்களிடையே உலகத்தர தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்க்கவும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இக்குழு எதிர்நோக்கி உள்ளது.
“RFR 23”ஐ அறிமுகப்படுத்திய பின் தொடக்க விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது,”நிலைத்த போக்குவரத்தை நோக்கி உலகளவிலான போக்கு இருப்பதால், தற்போது உள்ள எரிப்பு வாகனங்கள் மின்சார(combustion to electric) வாகனங்களாக விரைந்து மாற்றம் செய்யப்படுவது தேவையின் அவசியமாகிறது. உலகளவில் மின்சார வாகனத் தொழில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், இதன் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மிகப் பெரிய சாத்தியக் கூறுகள் உள்ளன” எனக் குறிப்பிட்டார்.
கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயக் களத்தில் ஜனவரி-2023ல் நடைபெறும் ‘ஃபார்முலா பாரத்’ நிகழ்வில் இந்தக் குழு பங்கேற்க உள்ளது.
ஆகஸ்ட் 2023ல் நடைபெறவிருக்கும் உலகின் மதிப்புமிக்க ஃபார்முலா மாணவர் நிகழ்வான ‘ஃபார்முலா ஸ்டூடண்ட் ஜெர்மனி‘க்கு இந்தக் காரை கொண்டு செல்ல இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அணிகள் இங்குள்ள மேடையில் இடம்பெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீம் ரஃப்தாரின் ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்ரி, “ஓட்டுநர் இல்லாத கார்கள், போக்குவரத்து சாதனங்களை இணைக்கும் தொழில்நுட்பம் போன்ற எதிர்காலக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தளமாக ரஃப்தார் விரைவில் அமையும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் காலநேரம் பார்க்காமல் இரவுபகலாக மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே ‘RFR 23’ உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் விடா முயற்சியின் உச்சமாக இந்தக் காரைக் குறிப்பிடலாம்” என்றார்.
இந்த ஆண்டு ஃபார்முலா பாரத் விர்ச்சுவல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து ஆரவாரத்துடன் தொடங்கிய டீம் ரஃப்தார், Pi-EV கான்செப்ட் சேலஞ்ச் போட்டியில் எண்ணற்ற தொழில்நுட்ப விருதுகளையும் கைப்பற்றி உள்ளது. தற்போது முதன்முறையாக எலெக்ட்ரிக் பிரிவில் நேரடிப் போட்டியில் களமிறங்கி விரைந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது.
தங்கள் இலக்கு குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்–ன் டீம் ரப்தார்மாணவர் குழுத் தலைவர் திரு.கார்த்திக் கருமஞ்சி, “பாதுகாப்பான, நிலையான, நம்பகமான மின்சார வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையாக கவனமாக இருந்தது. இந்தத் தொழிலில் தற்போது நிலவிவரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவது என்ற இலக்குடன் அணுகினோம். பேட்டரியில் சரியான வெப்ப மேலாண்மை, வலுவான தரவுப் பதிவு, காட்சிப்படுத்துதல், பேட்டரி பேக்–கிற்கு துல்லியமான அதிநவீன மதிப்பீட்டு அளவு போன்றவை அவசியம் என உணர்ந்தோம். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் எங்கள் திட்டங்களை வடிவமைத்து அவற்றை ‘RFR 23’ல் செயல்படுத்தி உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் டீம் ரஃப்தார் மாணவர் உறுப்பினரும், பவர்ட்ரெயின் பொறியாளருமான செல்வி கவுரிகா பிந்தல் கூறும்போது, “வாகனத்தை முழுமையாக எளிய முறையில் உருவாக்கவும், அதனை மேம்படுத்தவும் குறிப்பிட்ட அம்சத்தை மையமாகக் கொண்டு எட்டுக் குழுக்களாக பிரிந்து செயல்பட்டோம். ஏரோடைனமிக்ஸ், ஃபிரேம் அண்ட் கம்போசிட்ஸ், வாகன இயக்கம், டிரைவ்டிரைன், அக்யுமுலேட்டர் (அல்லது பேட்டரி சிஸ்டம்ஸ்), உயர் மின்னழுத்தம், குளிரூட்டும் அமைப்புகள், குறைந்த மின்அழுத்த அமைப்புகள் ஆகிய பிரிவுகளில் துணை அமைப்புகளாக இயங்கினோம்” எனத் தெரிவித்தார்.
தானியங்கி ஓட்டுதல்
தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளை முதன்மை இலக்காகக் கொண்ட ஆராய்ச்சிக் குழுவாக இருப்பதால், தானியங்கி ஓட்டுதல் என்ற போக்குவரத்து தொழில்நுட்ப மேம்பாடுதான் அடுத்தகட்டமாக இருக்கும் என மாணவர்கள் நம்புகின்றனர். அதை நோக்கி செயல்படுவது தங்கள் பொறுப்பு என்றும் அவர்கள் கருதுகின்றனர். குறிப்பிடத்தகுந்த அளவில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, உலகளாவிய அணுகும்தன்மை, வசதி, செயல்திறன், குறைக்கப்பட்ட செலவு ஆகியவற்றை இக்கருத்து உறுதி செய்கிறது.
இந்த இலக்கை எட்டும் வகையில், 2025ல் ஓட்டுநர் இல்லாத பந்தயக் காரை (Driverless race car)மேம்படுத்துவதை நோக்கி பயணிப்பதுடன், ஃபார்முலா மாணவர் நிகழ்வுகளில் ஓட்டுநர் இல்லாத பிரிவில் டீம் ரஃப்தார் பங்கேற்கும்.
இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், துல்லியமாக்கவும் சிறந்த சோதனைக் களத்தை ஃபார்முலா மாணவர் குழு வழங்குகிறது. வெளிநபர்களை சார்ந்திராமல் முழுமையாக தனிபயனாக்கத்துக்கு ஏதுவாக, இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான சக்தி பிராசசரை இணைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர். கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பிராசசிங், EVல் இருந்து DVக்கு தடையற்ற மாற்றம் செய்தல் போன்றவற்றில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.