எம்ஜிஆர் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்!

0
101

எம்ஜிஆர் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்!

எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று (ஜன.17) எம்ஜிஆர் பற்றி தான் புகழ்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி. அந்த வீடியோவுடன், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக.. எம்ஜி ராமச்சந்திரன் இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று கோபாலன் மேனன் – சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார். தமது சிறு வயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். 1936ம் ஆண்டு சதி லீலாவதி என்னும் திரைப் படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.

கருணாநிதியின் 1950ம் ஆண்டு திரைக் கதை வசனம் எழுதிய மருத நாட்டு இளவரசி மற்றும் மந்திரி குமாரி திரைப் படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்ஜிஆர் நடித்த சிறந்த திரைப் படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழக அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள், எம்ஜிஆரை ‘இதயக்கனி‘ என்று அழைத்தார். நாளடைவில் அனைத்து தரப்பு மக்களாலும் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953ம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தாம் நடித்த திரைப் படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

https://x.com/i/status/1880104763968397587

1962ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1977ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதல்வர் பதவியை வகித்து பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988ம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

அரசு விழா.. எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு கீழ் வைக்கப்படிருந்த அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.