உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை

0
306

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை

புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க ஐந்து துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியதாவது: மத்திய அரசு தற்சார்பு திட்டத்தின் கீழ் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் உள்நாட்டில் அலைபேசி தயாரிப்பை ஊக்குவிக்கவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டத்தை மேலும் ஐந்து துறைகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் உள்நாட்டில் தயாரிப்பு துறை மேலும் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அமெரிக்க நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீட்டின் பயன்கள் குறித்து விவரித்துள்ளார். அதுபோல உத்தரகண்ட் முதல்வர் டி.எஸ்.ராவத் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தில் தமது மாநிலத்தையும் சேர்க்குமாறு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் முயற்சி மற்றும் பல்வேறு ஊக்கச் சலுகைகள் காரணமாக வரும் மாதங்களில் அன்னிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.