இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் – வரலாற்று நிகழ்வு

0
339

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் – வரலாற்று நிகழ்வு

வாஷிங்டன்:

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. ஆனாலும், இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது.

அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. 1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபரான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்ரேலை ‘எதிரி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது.

அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

இந்த உறவில் மேலும் விரிசல் அடையும் விதமாக 2010 ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கத்தின் ராணுவ அமைப்பின் துணை தலைவரான முஹ்மது அல் மெக்ஹ் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான துபாயில் வைத்து கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாட் தான் காரணம் என ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியது. இதனால் இரு நாட்டு உறவில்
மோதல் முற்றியிருந்தது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதிகளில் தங்கள் நாட்டு உரிமையை பரப்பும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வெஸ்ட் பேங்க் பகுதிகளில் செட்டில்மெண்ட்ஸ் எனப்படும் இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு அங்கு இஸ்ரேல் மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.

இதற்காக வெஸ்ட் பேங்க் பகுதிகளில் ’அனக்சேஷன்’ எனப்படும் நிலகையகப்படுத்தல் அல்லது நாட்டின் உரிமையை விரிவுபடுத்தல் நடவடிக்கையில் இஸ்ரேல் அரசு இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலமாக வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதிகளில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்படுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் இஸ்ரேலியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெஸ்ட் பேங்க் பகுதியில் தங்கள் நாட்டு உரிமையை மேலும் பரப்பும் நடவடிக்கையாக சில பகுதிகளை இணைக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு தெரிவித்தார். இதற்கு பாலஸ்தீனம் உள்பட அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த அனக்‌சேஷன் திட்டம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஒப்புதலுக்கு பின் செயல்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

ஆனால், கொரோனா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அது வெஸ்ட் பேங்க் அனக்சேஷன் பற்றி முடிவு எடுப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என நெதன்யாகு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தெரிவித்திருந்தார். ஆனால் அனக்சேஷன் திட்டம் நிச்சயம்
செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான ராஜாங்க ரீதியிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது அல் நஹ்யான் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,’வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு மத்திய கிழக்கில் அமைதிக்கு முன்னேற்றும்’ என தெரிவித்துள்ளனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல்-அமீரகம் இடையே தூதரக உறவு வலுவடைய உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இன்னும் சில நாட்களில் இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளது. அதில் தொலைத்தொடர்பு, முதலீடு, சுற்றுலா, நேரடி விமான சேவை, பாதுகாப்பு, தொழில்நுட்பம், மின் சக்தி, சுகாதாரத்துறை, பொருளாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தொடர்பு அதிகரித்து தூதரங்கள் திறக்கப்பட்டு உறவு வலுப்படுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் அரசு தற்போது மேற்கொண்டுவரும் வெஸ்ட் பேங்க் ’அனக்‌ஷேசன்’ நடவடிக்கைகளை
நிறுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் அரபு நாடுகளில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

பாலஸ்தீனத்திற்கு நேரடி ஆதரவை அளித்துவரும் ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.

ஈரானின் எதிரி நாடக கருத்தப்படும் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் இந்த வரிசையில் சவுதி அரேபியாவும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுடன் அமீரகம் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம் இது ’துரோகச்செயல்’
என குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அமீரகம் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இருந்து செயல்படும் ஹமாஸ் போராளிகள் அமைப்பும் அமீரகத்தின்
இந்த நடவடிக்கையை ‘தங்கள் மக்களின் முதுகில் குத்தும் செயல்’ என தெரிவித்துள்ளது.