இமாசலபிரதேசத்தில் அதிநவீன வசதிகளுடன் 9 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

0
466

இமாசலபிரதேசத்தில் அதிநவீன வசதிகளுடன் 9 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரோதங்: இந்தியாவின் இமாசல பிரதேச மாநிலம் இமயமலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், கோடை வாழிடங்கள் என எழில் மிகுந்த பிரதேசங்களை கொண்ட இந்த மாநிலம் நீண்ட பனிப்பொழிவு நாட்களை சந்தித்து வருகிறது. மாதக் கணக்கில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக மாநிலத்தின் முக்கியமான சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு விடும்.

அந்த வகையில் இமாசல பிரதேசத்தின் அழகான லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் மணாலி சாலை ஆண்டுதோறும் பனிப்பொழிவால் மூடப்படுகிறது. இதனால் 6 மாதங்களுக்கு மேல் மற்ற பகுதிகளில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு தொடர்பிழந்து விடுகிறது.

எனவே மணாலி-லஹால் ஸ்பிடி இடையே அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தும் வகையில், மலைத்தொடரை குடைந்து சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மணாலி-லே நெடுஞ்சாலையில் 9.02 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்காக கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார். ரூ.3,300 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த சுரங்கப்பாதை பணிகள் இந்த ஆண்டு முடிவடைந்தது.

10 ஆயிரம் அடி உயரத்தில், உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாக உருவாகியுள்ள இந்த சுரங்கப்பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரையே தற்போதைய மத்திய அரசு கடந்த ஆண்டு சூட்டியது.

அதன்படி ‘அடல் சுரங்கப்பாதை’ என அழைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மணாலி அருகே ரோதங் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடல் சுரங்கப்பாதை திட்டத்தை தாமதப்படுத்தியதற்காக முந்தைய காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இன்று, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். பா.ஜனதா தலைவரான அடல் பிகாரி வாஜ்பாயியின் கனவு நனவானது மட்டுமின்றி, இமாசல பிரதேச மக்களின் நீண்டநாள் காத்திருப்பும் முடிவுக்கு வந்திருக்கிறது. அத்துடன் லே-லடாக்கின் உயிர்நாடியாகவும் மாறியிருக்கிறது. இந்த சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

இந்த சுரங்கப்பாதை நாட்டின் எல்லை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். எல்லை கட்டமைப்பை பொறுத்தவரை, அது பாலமாக இருந்தாலும் சரி, சாலை கட்டுமானமாக இருந்தாலும் சரி சாதாரண மனிதனுக்கு மட்டுமின்றி, அது ராணுவத்துக்கும் உதவியாக இருக்கும்.

2002-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை பணிகள், 2013-14 வரை வெறும் 1300 மீட்டரே முடிக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தில் போனால் 2040-ம் ஆண்டில்தான் பணிகள் முடியும் என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே எங்கள் அரசு இந்த பணிகளை துரிதப்படுத்தியது.

ஆண்டுக்கு 500 மீட்டர் என்ற அளவில் நடந்து வந்த பணிகளை ஆண்டுக்கு 1400 மீட்டராக வேகப்படுத்தி 2020-ம் ஆண்டில் முடித்துள்ளோம். 26 ஆண்டு பணிகளை வெறும் 6 ஆண்டுகளில் முடித்திருக்கிறோம். நாட்டின் பாதுகாப்பைவிட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு நலன்களில் சமரசம் செய்துகொண்ட ஒரு சகாப்தம் இருந்தது. அடல் சுரங்கப்பாதையாகட்டும், லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி திட்டமாகட்டும், தேஜாஸ் போர் விமான தயாரிப்பாகட்டும் அனைத்தையும் அவர்கள் பெரும்பாலும் மறந்தே விட்டிருந்தார்கள்.

வாஜ்பாய் அரசு 2002-ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய இந்த திட்டத்தை, அவரது அரசு முடிவடைந்தபின் மறந்தே விட்டார்கள். இதற்கு பின் என்ன கட்டயாமோ அல்லது அழுத்தமோ இருந்ததென்று தெரியவில்லை.

அதேநேரம் பாலமோ, சாலையோ, சுரங்கப்பாதையோ எல்லை கட்டமைப்பு திட்டங்கள் எதுவானாலும் அவற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் எனது அரசு வேகப்படுத்தியது. அடல் சுரங்கப்பாதையைப்போலவே கிடப்பில் போடப்பட்டிருந்த பல திட்டங்களை என்னால் கூற முடியும். அப்படி கிடப்பில் போடப்பட்டிருந்த பீகாரின் கோசி மகா பாலப்பணிகளை முடித்து கடந்த மாதம் திறந்து வைத்திருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சுரங்கப்பாதை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட எல்லை சாலை அமைப்பினருக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார். முன்னதாக லஹாலில் இருந்து சுரங்கப்பாதை வழியாக மணாலிக்கு பஸ் போக்குவரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘அமைதியான காலகட்டங்களில் அடல் சுரங்கப்பாதை பொதுமக்களுக்கும், போர்க்காலங்களில் ராணுவத்துக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். குறிப்பாக படைகள் நகர்வு, தளவாடங்கள், ரேஷன் பொருட்களை எளிதில் கொண்டு செல்லவும் இந்த சுரங்கப்பாதை பயன்படும்’ என்று கூறினார்.

அடல் சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர், முப்படை தலைவர் பிபின் ராவத், எல்லை சாலை அமைப்பு இயக்குனர் ஹர்பால் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிஸ்சு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா பரவல் காரணமாக எந்த வித பொது நிகழ்ச்சியிலும் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி, 6 மாதங்களுக்கு பின் முதல் முறையாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் செயல்பாட்டு முறையில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வளர்ச்சி திட்டங்களின் பயன் நாட்டின் ஒவ்வொரு பகுதிக் கும், ஒவ்வொரு குடிமகனுக் கும் சென்று சேர்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அடல் சுரங்கப்பாதை இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

முன்பெல்லாம் (காங்கிரஸ் ஆட்சி) சூழல் வேறு மாதிரி இருந்தது. அதாவது லஹால்- ஸ்பிடி போன்று பல பகுதிகள் கைவிடப்பட்டு இருந்தன. ஏனென்றால் சில மாவட்டங்கள், சிலருக்கு அரசியல் ஆதாயத்தை கொடுக்கவில்லை. அதனால் அந்த பகுதிகள் கேட்பாரற்று விடப்பட்டன.

ஆனால் தற்போது அனைவரின் உதவி மற்றும் அனைவரின் நம்பிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் வளர்ச்சி என்ற கருத்தின் அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. அரசின் செயல்பாட்டு முறையில் இது ஒரு சிறந்த மாற்றம் ஆகும்.

தற்போது, ஒரு பகுதியில் எவ்வளவு ஓட்டுகள் இருக்கிறது? என்ற அடிப்படையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது இல்லை. மாறாக இந்தியர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலித்துகள், ஆதிவாசிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்த பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த அடல் சுரங்கப்பாதை வழங்கும். சிலர் தங்கும் விடுதிகள் அல்லது ஓட்டல்களை நடத்தலாம். சிலர் வழிகாட்டிகளாக பணியாற்றலாம். அதைப்போல இந்த பிராந்தியத்தின் கைவினைப்பொருட்கள் மற்றும் இன்னபிற தயாரிப்புகளுக்கும் இந்த சுரங்கப்பாதை வழி திறந்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.