இந்திய கடற்படை தினம் : டிசம்பர் 4 முதல் மாநிலம் தழுவிய 13-நாள் பைக் பேரணிக்கு ஏற்பாடு

0
116

இந்திய கடற்படை தினம் : டிசம்பர் 4 முதல் மாநிலம் தழுவிய 13-நாள் பைக் பேரணிக்கு ஏற்பாடு

சென்னை: இந்திய கடற்படை தினத்தையொட்டி, வரும் நான்காம் தேதி சென்னையிலிருந்து 2500 கிலோமீட்டர் நீள இருசக்கர வாகன பேரணி நடைபெறவுள்ளது. 13 நாட்கள் நடை பெரும் இப்பேரணியில் கடற்படையின் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய “சீ ரைடர்ஸ் ஒடிஸி 2024” குழு பங்கேற்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணி, புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வள்ளியூர், மதுரை, கொடைக்கானல், அமராவதிபுதூரில் உள்ள சைனிக் பள்ளி, கோவை, வெலிங்டன், சேலம், வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும். பின்னர், பேரணியானது டிசம்பர் 16, 2024 அன்று சென்னை, ஐஎன்எஸ் அடையாரில் முடிவடையும். அங்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா அவர்களை வரவேற்று கவுரவிப்பார்.

இந்த பேரணி, நாட்டின் பாதுகாப்பிற்கு இந்திய கடற்படை ஆற்றும் பங்களிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மக்கள் கடற்படை குறித்து பெருமிதம் கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரணியில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் செல்லும் வழியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாரம்பரிய தலங்களுக்குச் சென்று கடற்படையின் திறன்கள், சாதனைகள் போன்றவற்றையும், படையில் இணைவதுபற்றியும் விளக்குவார்கள்.

இப்பேரணியில் உதவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 3000 கிலோமீட்டருக்கும் அதிகமான சவாலான நிலப்பரப்பை உள்ளடக்கிய ஹிமாலயன் ஒடிஸி போன்ற பைக் பேரணிகளை ஏற்பாடு செய்த அனுபவம் கொண்டுள்ளது.

1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது ஆபரேஷன் ட்ரைடென் நடவடிக்கை வாயிலாக இந்திய கடற்படை ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நடவடிக்கையின்போது, இந்திய கடற்படை தனது தீரம் செறிந்த நடவடிக்கை மூலம் கராச்சி துறைமுகத்தில் பிஎன்எஸ் கைபர் உட்பட நான்கு பாகிஸ்தானிய கப்பல்களை மூழ்கடித்தது.

கடற்படை தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் போர்களில் உயிர்நீத்த வீரத்தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கடற்படை தினத்தை கொண்டாடும் வகையில், செயல்பாட்டு விளக்கங்கள், இசை நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று விளக்கமளித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. சில பகுதிகளில், கடற்படை அதன் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கிறது.

இந்த ஆண்டு, இந்தியக் கடற்படை நாளின் முக்கிய நிகழ்வு, டிசம்பர் 4, 2024 அன்று ஒடிசாவின் பூரி கடற்கரையில் இடம்பெறுகிறது. மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் 24 போர்க்கப்பல்கள் மற்றும் 40 விமானங்கள் அணிவகுக்க உள்ளன. இந்த நிகழ்வில், மரைன் கமாண்டோ எனப்படும் மார்கோஸ் வீரர்கள் சார்பில் திடீர்த்தாக்குதல் நடத்துவது குறித்த செயல்விளக்கமும் இடம்பெறும். இவை, இந்திய கடற்படையின் தயார்நிலை மற்றும் தேசத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வு இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாகவும் அமையும்.