‘அரசு அளித்த ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும்’ – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
64

‘அரசு அளித்த ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும்’ – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் உரையை படிக்காமலேயே அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் அவர்கள், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவுசெய்திட வேண்டுமென்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதன் விவரம் :

இன்று ஆளுநர் உரையின் தொடக்கத்தில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பாக நான் பின்வரும் விவரங்களை இப்பேரவையின் இசைவோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

2023-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 9-ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பேரவையில் உரையாற்றியபோது, ஏற்கனவே அவரால் ஒப்பளிக்கப்பட்டு, பேரவையில் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டுமென்றே விடுத்தும், அச்சிடப்படாத சில பகுதிகளைச் சேர்த்தும் உரையாற்றினார்கள். உயர்ந்த மரபுகள் மற்றும் மக்களாட்சித் தத்துவத்தின் அடிநாதமாக, விதையாக விளங்குகின்ற நூறாண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்தையும், மாட்சிமையையும், சிறப்பையும் காக்கின்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுந்து, மாண்புமிகு பேரவைத் தலைவரின் இசைவோடு, மூத்த மொழியாம் நம் இனிய தாய்மொழியில் – தமிழில், தீர்மானத்தை மொழிந்தது, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அப்போது புரிந்திருக்காது.

2024-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12-ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பேரவையில் உரையாற்றுகையிலும், இதே முறையைத் தொடர்ந்ததால் அன்றைக்கு என்னால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட அது இப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர், மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 2-ஆம் நாள் நடைபெற்றபோது அனுப்பிய வாழ்த்துச் செய்தியை இங்கே நினைவு கூர்கிறேன்.

‘much of the richness of Indian Democracy is derived from the Tamil Nadu Legislature and is appreciated all across the world’. என்று தெரிவித்திருக்கிறார்கள். இவ்வளவு பெருமை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் புகழ் மங்கி விடாமல் பாதுகாத்து நிற்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 176-இன்கீழ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கக் கூட்டத்தொடரிலும் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள் என்பதை அரசியல் சட்டத்தில் மிக விவரமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

As per Article 176 of the Constitution of India, “The Governor shall address the Legislative Assembly and inform the legislature of the causes of its summons”. But, our Hon’ble Governor is acting against the constitution, which is not good. I am to remind this House, that in 1995, the Government brought a Government Resolution to recall the then Governor Dr. M. Chenna Reddy. Even then, Governor has read the Governor’s Address as prepared by the Government in 1996.

நான் ஒன்றை இந்தப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆளுநர் பதவி குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநர் பதவி உள்ள வரை, அப்பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து கொண்டவர். கடந்த பேரவைக் கூட்டத்தொடரை முடித்து வைக்காமல், ஆளுநர் உரையைத் தவிர்த்து, மற்ற சில மாநிலங்களில் முடிவெடுப்பது போன்று, நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம். ஆனால், மாண்புமிகு கலைஞர் அவர்களுடைய வழித்தடங்களைப் பின்பற்றி ஆட்சி புரிகிற நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாம் மரபு மீறக்கூடாது என்ற பண்போடு ஆளுநர் உரைக்காக பேரவையைக் கூட்ட யோசனை வழங்கினார்கள்.

மீண்டும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்திருக்கிறார். அதாவது, ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல் சென்றிருக்கிறார்.

தற்போது மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசியகீதம் பாடப்படாதது தொடர்பாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, கடந்த ஆண்டு ஆளுநர் அவர்கள் இதே கருத்தைக் கோடிட்டு, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு அப்போதே பதில் அளித்து, இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதே பின்பற்றப்பட்டு வருவதை தெளிவாகத் தெரிவித்திருந்தீர்கள். ஆனாலும், மீண்டும் இன்று அதையே ஒரு பிரச்சினையாக ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டு, அவர் அரசு அனுப்பிய உரையைப் படிக்காமல் சென்று விட்டது, அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது.

இந்த நாட்டின்மீதும், தேசிய கீதத்தின்மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்தப் பேரவை உறுப்பினர்களும் என்றென்றும் கொண்டுள்ளார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும், தேசத் தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன்மதிப்பினைக் கொண்டது இந்த அரசு.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மைச் சீடராக, திராவிடச் சமூகத்திலிருந்து உதித்த சுயமரியாதைக் கனலாக செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டிக் காத்து வரும் இச்சட்டமன்றப் பேரவையின் மாண்பினை நிலைநாட்டிடும் வகையில்- மாண்புமிகு பேரவைத் தலைவரின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-யை தளர்த்தி இது தொடர்பான ஓர் தீர்மானத்தினை முன்மொழிந்திட தங்கள் அனுமதியை கோருகிறேன்.

தீர்மானம்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசால் விதிகளின்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் படிக்காமல் சென்றுவிட்டார். ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரை அச்சிடப்பட்டு அவையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள பிற சட்டமன்றப் பேரவைகளுக்கு மட்டுமல்லாது, உலக அளவில் உள்ள சட்டப்பேரவைகளுக்கும் எடுத்துக்காட்டாகவும், நூறாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட இம்மாமன்றத்தின் மக்களாட்சி மாண்பினை உயர்த்திப் பிடிக்கவும், மரபைக் காத்திடவும், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவுசெய்திட வேண்டுமென்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.