‘அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடுதான் மட்டும்தான்’ – துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கடந்த 10.09.2024 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற்றன. 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 11,56,566 நபர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள் முதலமைச்சர் கோப்பை-2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்படுகின்றன. மொத்தம் 35 வகையான விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 உடைய மாநில அளவிலான போட்டிகளை இன்று உங்களுடைய முன்னிலையில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன். தமிழ்நாடு முழுவதும் இருந்து இங்கே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள உங்களை எல்லாம் பார்க்கும் போது உங்களிடமுள்ள அதே உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. துணை முதலமைச்சர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கானதுதான். இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில் தான் முதலில் கையெழுத்திட்டேன் என்பதை இங்கே பெருமையோடு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த சிறப்புக்குரிய நிகழ்வுக்கு இரண்டு முக்கியமான வீரர்கள் வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் பேட்மிண்டன் வீராங்கனையான தங்கை துளசி முருகேசன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர்தான் தங்கை துளசிமதி முருகேசன் அவர்கள். உலக பாரா சாம்பியன்ஷிப் 2024ல் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார். ஆசிய பாரா விளையாட்டு 2023 போட்டியில் தங்கப்பதக்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்தான் அருமை தங்கை துளசிமதி முருகேசன். விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று பதக்கங்களை குவித்து வரும் தங்கை துளசிமதி முருகேசனுக்கு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்றதற்காக நம்முடைய கழக அரசு நம்முடைய முதலமைச்சர் ரூ.2 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கி பெருமைப்படுத்தினார்கள். அதே போல திருவாரூரை சேர்ந்த தடகள வீரர் தம்பி பிரவீன் சித்ரவேல் அவர்களும் இங்கு வருகை தந்து இருக்கிறார்கள்.
டிரிபிள் ஜம்ப் பிரிவில் இளையோர் ஒலிம்பிக்ஸ், ஆசிய உள் அரங்க சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு 2023, ஒலிம்பிக்ஸ் 2024, காமன்வெல்த் விளையாட்டு போன்ற தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றவர் தான் தம்பி பிரவீன் சித்ரவேல் . தம்பி பிரவீன் அவர்களுக்கும் ரூ.27 லட்சம் அளவிற்கு நம்முடைய கழக அரசு நம்முடைய முதலமைச்சர் உயரிய ஊக்கத் தொகை வழங்கி இருக்கிறார்கள். துளசிமதி முருகேசன், பிரவீன் சித்ரவேல் ஆகிய இருவருமே இன்றைக்கு ஏராளமான வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றார்கள். இவர்களுடைய போட்டி மற்றும் பயிற்சிக்காக நம்முடைய தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.30 லட்சம் நம்முடைய கழக அரசு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். இருவருக்கும் அனைவரின் சார்பாக என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாநிலம் சிறந்து விளங்கும். ஆனால் இந்தியாவிலேயே அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலம் எதுவென்றால் அது நம்முடைய தமிழ்நாடு தான். குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை செய்கின்ற அந்த சாதனைகள் மகத்தானவை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். இந்த போட்டிக்காக சென்ற ஆண்டு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றார்கள். ஆனால் இந்த முறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என்று எல்லா தரப்பில் இருந்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இத்தனை லட்சம் பேர் அரசு நடத்துகின்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள் என்றால், அந்த விளையாட்டு போட்டியினை நம்முடைய துறை அவ்வளவு சிறப்பாக, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அதனால் தான் இந்த ஆண்டு நம்முடைய முதலமைச்சர் இந்த போட்டிகள் நடத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்த விளையாட்டு போட்டிக்கான பரிசுத்தொகை மட்டுமே ரூ.37 கோடி என்பதை இங்கே பெருமையோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தியாவிலேயே இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வருடா வருடம் ஒரு விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும் தான். குறிப்பாக உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இந்த வருடம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, கேரம், செஸ், வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை கோ-கோ, டிராக், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும், இந்தாண்டு சேர்த்து இருக்கிறோம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்திருக்கக் கூடிய நீங்கள் அத்தனை பேரும், ஒவ்வொருவரும் இன்றைக்கு தமிழ்நாட்டுடைய வரலாற்றிலே இணைந்து இருக்கிறீர்கள். விளையாட்டினை நம்பி களம் நமதே என்று புறப்பட்டு வந்துள்ள உங்களுடைய கனவுகள் வெல்ல நம்முடைய திராவிட மாடல் கழக அரசு என்றைக்கும் துணை நிற்கும். விளையாட்டு வீரர்களுக்கு துணை நிற்கின்ற வகையில் ஏராளமான நடவடிக்கைகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் 33 வகையான விளையாட்டுகளுக்கு தேவையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் தொடங்கி வைத்துள்ளோம். இந்த திட்டத்தின்கீழ் இதுவரை நானே நேரில் சென்று 23 மாவட்டங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி இருக்கின்றேன். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நூற்றுக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றோம். அதே போல விளையாட்டு துறையில் சாதிக்கின்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறோம்.
சிறப்பு உதவித்தொகை, வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக விளையாட்டு வீரர்களுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கின்ற மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்குகின்றது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பொற்காலம் என்று நம்முடைய கழக ஆட்சியை சொல்லலாம். சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து தங்கை துளசிமதி முருகேசன் உட்பட 6 மாற்றுத்திறனாளி வீரர்கள் சென்றார்கள். அவர்களுக்கு தலா ரூ.7 லட்சம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஊக்கத் தொகையாக விளையாட்டு போட்டிக்கு முன்னதாக, அவர்கள் செல்வதற்கு முன்பாகவே நம்முடைய முதலைமைச்சர் அவர்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். அங்கு சென்ற 6 பேரில் 4 பேர் பதக்கங்களோடு திரும்பி வந்து தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்கள். அவர்களுக்கு ரூ.5 கோடி அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் உயரிய ஊக்கத் தொகை வழங்கினார்கள். இதே போல ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற நம்முடைய தமிழ்நாட்டு வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் போன்ற வீரர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு கோடி அளவுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஒரு பக்கம் நம்முடைய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தி நம்முடைய அரசு சாதனை படைத்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் அண்மையில் நீங்கள் எல்லாம் ரசித்த சென்னை பார்முலா 4 சாலை இரவு நேர கார்பந்தயம். தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற அந்த போட்டியை இந்த உலகமே பார்த்து வியந்து பாராட்டியது. அது மட்டுமில்லாமல் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ், ஆசிய கோப்பை ஹாக்கி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சர்ஃபிங் லீக், சைக்ளோத்தான் இப்படி நாம் நடத்திய போட்டிகள் ஏராளம். இந்த சாதனை பயணம் எப்பொழுதும் தொய்வின்றி தொடர இங்கே வந்து இருக்கக் கூடிய உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியம்.
நீங்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பல தேசிய, மாநில அளவிலான போட்டிகளிலும் விளையாட போகின்ற எதிர்காலத்தினுடைய, நம்ம நாட்டினுடைய வீரர்கள். எனவே உங்க அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல இந்த போட்டிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள். தன்னார்வலர்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேரை இந்த நேரத்தில் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றேன். இந்திய ஒன்றியத்தில் நம்முடைய விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவோம். களம் நமதே. இறுதிப்போட்டியில் வெல்லும் உங்களை பரிசளிப்பு விழாவில் மீண்டும் சந்திக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்” என்று கூறினார்.