அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…? அமைச்சர் உதயகுமார்

0
371

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…? அமைச்சர் உதயகுமார்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில், மதுரையில் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்றும், இதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

செல்லூர் ராஜுவின் இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எடப்பாடியார் என்றும் முதல்வர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தேர்தலுக்கான அவசரம் இப்போது இல்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார் கூறுகையில், அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சராக வரமுடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் இருவரையும் முன்னிறுத்தி வெற்றி பெற்றோம். ஒற்றுமையோடு களத்தில் சந்தித்தால் வரும் தேர்தலில் பெற்றி உறுதி. நடந்து முடிந்த தேர்தல்களை போலவே எதிர்வரும் தேர்தல்களையும் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.