அணைகளின் நீர்மட்டங்களை கண்காணியுங்கள் – புயல் எச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வானிலை மைய அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன், வருவாய் பேரிடர் துறை மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து பல்வேறு உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.
புயல் காரணமாக அணைகளின் நீர்மட்டங்களை கண்காணித்து வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள 244 படகுகளில் 162 மீன்பிடி படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 82 படகுகள் கரை திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை தயார்நிலையில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கும்போது கொரோனா முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.