COVID WAR ROOMல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் திடீர் ஆய்வு: அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை; குவியும் பாராட்டு

0
337

COVID WAR ROOMல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் திடீர் ஆய்வு: அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை; குவியும் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின்படி சென்னை DMS வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மையத்தினை நேற்று (14.05.2021) இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 24 மணிநேரமும் செயல்படும் இந்த மையத்தில், 104 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பெறப்படும் பொது மக்களின் அழைப்புகள் முறையாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தேவையான உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை கேட்டறிந்தார்கள்.

இம்மையத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்பாடு செய்வது மற்றும் கொரானா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் பொழுது 104 எண்ணிற்கு சென்னை வானகரம் பகுதியிலிருந்து பங்கஜம் என்பவர் செய்த தொலைபேசி அழைப்பினை முதலமைச்சர் எடுத்து, அவரது தேவையினை பதிவு செய்ததுடன், அவருக்கு உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்கள். முதலமைச்சர் அவர்களின் உடனடி உதவிக்கு பங்கஜம் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இம்மையத்தின் மூலம் சென்னை மாநகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியிட விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், பெறப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி மற்றும் ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர். தாரேஸ் அகமது, நந்தகுமார் மற்றும் டாக்டர். எஸ். உமா ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வும், அவசர உதவி நாடியவரின் அழைப்பை எடுத்து பேசி நடவடிக்கை எடுத்த நிகழ்வுக்கு அரசியல் கட்சியனரும், பொதுமக்களும் இணையவாசிகளும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.