ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள் என அனைவரின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட் – பிரதமர் மோடி

0
132

ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள் என அனைவரின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட் – பிரதமர் மோடி

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5ஆவது பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பின் அது குறித்து பிரதமர் மோடி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி , “அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார். அம்ருத காலத்தின் இந்த முதல் பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய ஆற்றலைப் புகுத்துகிறது என்றும் வளர்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப, வலுவான அடித்தளத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட லட்சிய சமுதாயத்தின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதென்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். வரி விகிதத்தை குறைத்து அதற்கேற்ப நிவாரணம் அளித்துள்ளதாகவும் பட்ஜெட்டில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டம் இடம்பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல் முறையாக ‘விஸ்வகர்மா’ பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்பான திட்டம் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதென்றும் பிரதமர் மோடி கூறினார். இதனிடையே, மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து செங்கலை ஏந்தி தமிழ்நாடு எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில், மதுரை எய்ம்ஸ்-க்கு எங்கே நிதி என்றும் கண்டன கோஷம் எழுப்பினார்.