7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்த மாணவி சினேகா..!

0
106

7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்த மாணவி சினேகா..!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கைப்பற்றி அமோக வெற்றிபெற்றிருப்பது திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி பெற்ற இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவில் இம்முறை மாவட்ட செயலாளர்களே நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்தனர். அதுமட்டுமின்றி பல இளம் தலைமுறையாளர்களும் களம் கண்டனர். அதில் பலர் வெற்றியும் பெற்று அசத்தியுள்ளனர். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் திருச்சியை சேர்ந்த சினேகாவும்.

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், மக்களும், கட்சி நிர்வாகிகளும் ஆராவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர். சட்டமன்ற தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றில் வெற்றி பெற்ற திளைப்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம்கண்டது திமுக. இந்த இரண்டு தேர்தலிலும் தோல்வியடைந்த விரக்தியில், இந்த தேர்தலிலாவது எப்படியேனும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு போட்டியிட்டது அதிமுக. தங்ளது இருப்பை காட்டிக் கொள்ள பாஜக மறுபுறம் தீவிரமாக முயற்சித்தது. திமுகவில் பலருக்கு சீட் கிடைக்காத போதும் தனித்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது பலத்தை தலைமைக்கு நிரூபித்தனர். அதுமட்டுமின்றி பல இளம் தலைமுறையை சேர்ந்த பெண்கள், மாணவிகள் சுயேட்சையாக நின்று வெற்றியும் பெற்றனர். அப்படி வெற்றி பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் திருச்சியை சேர்ந்த சினேகா.

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் போட்டியிட்டவர் 22 வயதான மாணவி சினேகா. தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பதிவான வாக்குகள் நேற்று காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் எண்ணப்பட்டது.. அப்போது திமுக 14 வார்டுகளிலும், அதிமுக, மதிமுக, விசிக, அமமுக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அப்படி வெற்றி பெற்றவர்களில் ஒருவர் சினேகா. சினேகா போட்டியிட்ட வார்டில், அவருடன் சேர்ந்து அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, 2 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் பதிவான மொத்தம் ஆயிரத்து 57 வாக்குகளில் சினேகா 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் 191 வாக்குகள் பெற்று டெபாசிட்டை காப்பாற்றிக் கொண்டார். மற்ற 7 பேரும் மண்ணை கவ்வினர். இத்தனை வருடங்களாக அரசியலில் பழம் தின்று கொட்டைப் போட்டவர்களையும், பணத்தை அள்ளி வீசியவர்களை எல்லாம் தாண்டி 22-வயது மாணவி தோற்கடித்து விட்டார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கும். குறிப்பாக அரசியல் கட்சியினருக்கு.