2018-ல் 2 லட்சம்… 2021ல் 14 லட்சம்… நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்… தடுக்கும் வழிமுறைகள் என்ன?

0
136

2018-ல் 2 லட்சம்… 2021ல் 14 லட்சம்… நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்… தடுக்கும் வழிமுறைகள் என்ன?

இணையவழி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இணைய வழி சைபர் குற்றங்கள் தொடர்பாக மாநில சைபர் கிரைம் கண்காணிப்பாளர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சுமாராக 2 லட்சம் சைபர் குற்றங்கள் நடந்தன. 2021 ஆம் ஆண்டில் அவை 14 லட்சம் குற்றங்களாக உயர்ந்துள்ளன.

குறிப்பாக கடந்த 1/04/2021 முதல் 18/9/2022 வரையில் மொத்தம் 62,767 புகார்கள் சைபர் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்டுள்ளது. அவற்றில் அதிகப்படியாக UPI பண பரிவர்த்தனை மோசடி – 12,485, தொலை பேசி அழைப்பு மோசடி – 6670, கிரெடிட், டெபிட் கார்டு மோசடி – 6201, சமூக வலைதள பாலியல் ரீதியிலான குற்றங்கள் – 2820 மற்ற சமூக வலைதள குற்றங்கள – 2623 என்ற எண்ணிக்கையில் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

சமீப காலமாக வாட்ஸ் ஆப்களில் ஒரு நிறுவனத்தின் தலைவர் புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபடுதல், மின்சார வாரியத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி மோசடி ஈடுபடுதல், போலியான கடன் செயலிகள் மூலம் குறைந்த பணம் கொடுத்து பின் அதிக அளவில் வட்டி கேட்டு மிரட்டுதல், சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் நட்பு ஏற்படுத்தி பணம் பறித்தல், வங்கிகளில் இருந்து மெசேஜ் மற்றும் ஈமெயில்கள் அனுப்புவது போல லிங்க் அனுப்பி ஏமாற்றுதல் போன்ற வகைகளில் மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வலையை விரிக்கின்றனர்.

குறிப்பாக மின்வாரியத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி மோசடி செய்யப்பட்டதாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 200 புகார்கள் வந்துள்ளன.

கடந்த 1.4.2021 முதல் 18/9/2022 வரை மொத்தம் நடந்த 62,767 இணைய வழி குற்றங்கள் தொடர்பான புகார்களில் 481 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இணைய வழியில் பணம் மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற நம்பருக்கு கால் செய்ய வேண்டும். உடனடியாக பணம் இழப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழி குற்றங்களை கட்டுப்படுத்துவது சவாலான பணி. இணைய வழி குற்றங்களில் ஈடுபடுவோர்களில் 90% வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து செயல்படுகின்றனர். சமூக வலைதள குற்றங்களை தடுக்க Social Analytical Team என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சோசியல் மீடியா குற்றங்களை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் 3-rd party Apps-களை மொபைலில் பதிவிறக்கம் செய்யக்கூடாது’ என கூறினார்.