விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் இம்மாதமே முடிக்கப்படும்- அமைச்சர் பதில்

0
116

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் இம்மாதமே முடிக்கப்படும்- அமைச்சர் பதில்

சென்னை: விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படுவதோடு, இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் மடத்துக் குளம் உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற் கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாக குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் உறுதிப்பட கூறினார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரத்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்த வில்லை, நிதியும் ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை என்பதால் சமீபத்தில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்- அமைச்சர் அறிவுறுத்திய நிலையில், மின்சாரம் வழங்க உரிய கட்டமைப்பை ஏற்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது என்றும், விரைவில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.