வாலிபரை தாக்கிய விவகாரம்… அத்துமீறிய செயலுக்காக மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் : சத்தீஸ்கர் முதல்வர் உத்தரவு

0
173

வாலிபரை தாக்கிய விவகாரம்… அத்துமீறிய செயலுக்காக மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் : சத்தீஸ்கர் முதல்வர் உத்தரவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு சமயத்தில் மருந்து வாங்க வந்த நபரை சூரஜ்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறையினர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருந்து கடைக்கு சென்ற வாலிபரின் வாகனத்தை போலீசார் மடக்கி விசாரித்தபோது, வாகனத்தின் ஆவணங்களை காட்டினார். அப்போது மாவட்ட கலெக்டர் ரன்பீர் சர்மா, வாலிபரின் செல்போனை பிடுங்கி காலில் கீழே போட்டு உடைத்தார். பிறகு அவரை கன்னத்திலும் அறைந்தார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசாரும் வாலிபரை தாக்கியுள்ளனர். இந்த காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் கலெக்டருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தனது செயலுக்காக மாவட்ட கலெக்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த வாலிபர் தவறாக நடந்துகொண்டதால் அறைந்ததாக கூறி உள்ளார்.

எனினும், கலெக்டரின் அத்துமீறிய செயலுக்காக சூரஜ்பூர் கலெக்டர் ரன்பீர் சர்மாவை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சூரஜ்பூர் கலெக்டரின் இந்த செயலை ஐ.ஏ.எஸ் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.