பிரதமர் மோடியின் பாதையில் 10 ஆண்டுகள் பயணித்தால் உலகின் வல்லரசாக இந்தியா மாறும் – அண்ணாமலை பேச்சு

0
104

பிரதமர் மோடியின் பாதையில் 10 ஆண்டுகள் பயணித்தால் உலகின் வல்லரசாக இந்தியா மாறும் – அண்ணாமலை பேச்சு

திருப்பூர்: பா.ஜனதா சார்பில் சாதனை விளக்க தாமரை மாநாடு பல்லடம் அருகே கரையாம்புதூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு அப்போது அவர் பேசியதாவது:-

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே மக்கள் தீர்ப்பை எழுதிவிடுவோம் என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டுக்கு மக்கள் திரண்டுள்ளனர். அரசியல் மாற்றம் வேண்டும்.

தமிழகத்தில் நல்ல அரசியல் களம் வேண்டும் என்று இங்கு திரண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு ஆட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டு, இதுபோல் அவர் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக வந்துள்ளீர்கள்.

கொரோனா தடுப்பூசி மத்திய அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 200 கோடி ஊசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 135 கோடி மக்கள் இந்தியாவில் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியது போக 3-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்து பணப்பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் செல்போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 14 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 68 சதவீதம் பெண்கள் பெயரில் அந்த வீட்டின் பட்டா உள்ளது.

தி.மு.க.அரசின் சாதனை என்பது குடிசை வீட்டுக்கு சென்று, அவர்களே எடுத்துச்சென்ற வெள்ளி டம்ளரில் டீ குடித்து, வெளியே வருவது தான் திராவிட மாடல் சாதனை. இதற்காக குடிசை வீடுகள் தமிழகத்தில் வைத்திருந்தார்கள்.

60 ஆண்டுகளில் 5½ கோடி கழிப்பிடங்கள் தான் கடந்த ஆட்சி காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடி 11 கோடியே 55 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்துள்ளார். மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் பிரேக் இன் இந்தியா என்கிறார்கள். தி.மு.க. தலைவர்கள் மேடைக்கு மேடை பேச்சு, தனித்தமிழ்நாடு வேண்டும் என்பதே. சமீபத்தில் தி.மு.க. எம்.பி., முதல்-அமைச்சரை வைத்துக்கொண்டு மேடையில் பேசினார்.

தமிழர்களை நேசிக்கும், தமிழ் மண்ணை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் தலைவராக மோடி திகழ்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழகத்தை வளர்த்து வருகிறார். 37 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பனியன் தொழில் ரூ.5 கோடி ஏற்றுமதியில் தொடங்கியது.

இன்று ரூ.50 ஆயிரம் கோடிக்கு பனியன் வர்த்தகம் செய்யும் நகராக பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்தகட்டத்துக்கு செல்லும் வகையில் திருப்பூர் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 879 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

ஆனால் திருப்பூரை சேர்ந்த ஆட்சியாளர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் செய்யக்கூடிய மனம் இல்லை. திருப்பூரில் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை மேயர் இருக்கிறார்கள்.

இவர்கள் மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிதி கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது. கேட்பதற்கு மனமில்லை. பா.ஜனதாவுக்கு 2 கவுன்சிலர்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் மக்களுக்காக போராடி வருகிறார்கள்.

திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் உயர்ந்த சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அடுத்தகட்டத்துக்கு வந்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கு முன்பாக ஆஸ்பத்திரி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பா.ஜனதா முயற்சி எடுத்து வருகிறது.

பல்லடத்தில் கைத்தறி, ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி உற்பத்தி நடக்கிறது. கைத்தறிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக மாற்ற இருக்கிறார்கள் என்றதும் நேரடியாக நிதி அமைச்சரிடம் எடுத்துச்சென்று 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி தொடர வழிவகை செய்யப்பட்டது.

பஞ்சு விலை உயர்ந்தபோது, மத்திய மந்திரியை திருப்பூருக்கு அழைத்து வந்து விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை மந்திரி திருப்பூருக்கு நன்மை செய்வார்.

கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழி வளர்ப்புக்கு விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நிறுவனங்களும் உற்பத்தியை பார்க்க வேண்டும்.

இன்னும் 15 நாட்களுக்குள், மாநில அரசு தலையிட்டு கறிக்கோழி விவசாயிகள், நிறுவனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா களத்துக்கு வந்து போராடும்.

தி.மு.க. அமைச்சர்கள் இப்போது மக்களை செல்லமாக அடிக்க தொடங்கிவிட்டார்கள். இதை அவர்கள் பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மனு கொடுக்க செல்பவர்களை அடிக்கிறார்கள். பெரியார் பல்கலைக்கழக தேர்வில், கேள்வித்தாளில் தமிழகத்தில் கீழ்சாதி பெயரை காட்டுங்கள் என்று வினா வந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா.

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளியில் மாணவி இறப்பு சம்பவத்தில் அரசு 4 நாட்களாக மெத்தனப்போக்காக இருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் போராடி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்போம், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ.-க்கு வழக்கை மாற்றி, சிறுமியின் மரணத்துக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் மக்களின் ஒற்றைக்கோரிக்கை.

இதற்கு பதில் கூற முதல்-அமைச்சருக்கு நேரம் இல்லை. இன்று அந்த பள்ளியில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை போல் இந்த சம்பவம் விளங்கியுள்ளது.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அரசு பணியில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 1 வருட காலத்தில் பல்வேறு ஊழல் வெளியாகிவிட்டது. சோலார் பிளாண்ட் போடுவது, கைத்தறி சேலை வாங்கியது, பொங்கல் தொகுப்பு ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது. பொங்கல் தொகுப்பு ஊழலில் மட்டும் நிச்சயம் தண்டனை பெறுவார்கள்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை 400 எம்.பி.க்களுடன் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது இந்தியாவின் அனைத்து மக்களின் ஆசையாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை குறிவைக்கிறார்கள்.

இதே பாதையில் 10 ஆண்டுகள் பயணம் செய்தால் உலகின் வல்லரசாக இந்தியா மாறும். நேர்மையான ஆட்சி அமைய பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து பா.ஜனதா எம்.பி. வேண்டும். அப்போது ஏற்றுமதி வர்த்தகம் ரூ.5 லட்சம் கோடியை அடையும். மக்களின் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

பிரதமர் மோடி ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். தீபாவளி சமயத்தில் இந்த 2 நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு, 3 மடங்கு வளர்ச்சி அடையும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.