பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருது- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

0
100
விருதுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருது- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளை ஆதரவளித்து ஊக்குவித்திடும் விதமாக “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில், 2020-21-ம் ஆண்டிற்கான ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’, கருப்பு கவுணி ரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,672.5 கிலோ அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த செ.மூர்த்திக்கு விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வாசனை சீரக சம்பா ரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,200 கிலோ மகசூல் பெற்று 2-ம் இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கோ.பொன்னு புதியவனுக்கு விருதுடன் பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடி செய்து எக்டருக்கு 10,024.875 கிலோ மகசூல் பெற்று 3-வது இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி. லட்சுமிதேவிக்கு விருதுடன் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் முதல்-அமைச்சர் இன்று வழங்கினார்.

மேலும், வேளாண்மை உழவர் நலத் துறையில் காலியாக உள்ள 17 தோட்டக்கலை உதவி இயக்குநர், 162 தோட்டக் கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.