“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் தி.மு.கவுக்கு இல்லை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0
130

“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் தி.மு.கவுக்கு இல்லை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கள் முடிந்தை அடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டதில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொரோனா கட்டுப்பாடுகளால் நேரடியாக சந்திக்க முடியாததால் காணொலி மூலம் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது. நேருக்கு நேராக சந்தித்து முடியாவிட்டாலும் நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வோடு உங்கள் முன் நிற்பதாக நினைத்து பேசுகிறேன். விவசாயிகளுக்காக கடைசி வரை உழைத்த நாராயணசாமி நாயுடு பிறந்த நாளில் இந்த பிரச்சார கூட்டம் நடப்பது சிறப்புமிக்கது. பச்சை துண்டுக்கு இந்திய அளவில் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் நாராயணசாமி நாயுடு.

நாராயணசாமி நாயுடு போராட்டத்துக்கு மதிப்பளித்து விவசாயிகள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை என்று கலைஞர் அறிவித்தார். ஒவ்வொரு முடியும் விவசாயிகள் கடனை ரத்து செய்தது திமுக ஆட்சியே. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் கடுமையாக எதிர்த்தது திமுக அரசு. விவசாயிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது திமுக தான். வேளாண்மை, உணவு ஆகிய 2 துறைகளையும், இரு கண்களைப்போல் கருதி திமுக அரசு செயல்படுகிறது. நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. 1.5 லட்சம் விவசாயிகளுக்கு 1.89 லட்சம் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது திமுக அரசு.

அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும் திமுக அரசு தான். கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்துக்காக நிறைவேற்றிய திட்டங்களை அதிமுக அரசால் கூற முடியுமா?. பஞ்சு மீதான 1% வரியை திமுக அரசு ரத்து செய்தது. கோவை மாவட்டத்துக்கு 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோவையில் 24,000 பேருக்கு பட்டா, முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைத்து ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 75%-க்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக வெற்றி பெற்றால் தான் அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். திமுக ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இனத்தின் ஆட்சி.

அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றும். அதிமுக ஆட்சியில் தரமின்றி போடப்பட்ட சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. கோவையில் நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலப்பணி தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும். மாதந்தோறும் வார்டு வாரியாக குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் முன்கூட்டியே தெரிந்தும் அப்போதைய சட்ட அமைச்சர் சி.பி.சண்முகம் மவுனம் காத்தார். சட்டமன்றத்தில் நாம் கேள்வி எழுப்பிய போதும் உரிய பதில் அளிக்கவில்லை. நீட் விவகாரத்தில் திருடனைப்போல் சிக்கிக்கொண்டது அதிமுக.

படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று தடுக்கிற சூழ்ச்சியுடன் வருபவர்களைத்தான் எதிர்க்கிறோம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் திமுகவுக்கு” இல்லை என தெரிவித்தார்.